Aug 13, 2010

உடைந்த நிலவு..கலையாத வெளிச்சம்..


சுய விருப்பங்கள்
தொலைத்து
விருப்பப்படிவாழவோ
அல்லது வாழ வைக்கவோ
மிக கவனமாய்
போராடிக்கொண்டிருக்கும்
எண்ணற்ற மனிதர்களில்
நானும் ஒருவன்.

என் வழியில்
ஏய்ப்புகள் இல்லை..
ஏமாற்றங்கள் உண்டு..
அகங்காரங்கள் இல்லை..
ஆசைகள் உண்டு..
போகின்ற வழிகளெங்கும்
ஆசைகளை விலையாய்
கொடுத்து ஏமாற்றங்களை
வாங்கி குவிக்கிறேன் இதயத்தில்..

எந்திரமாக்கிவிடுமென
பயந்து இதுவரை தள்ளியே
நின்றிருந்தேன் ..
சூழ்நிலைகளிடமிருந்தும்
சமூகத்திடமிருந்தும்.
ஆனாலும் மனதை
மெல்ல மெல்ல அழுத்துகிறது
கடமை எனும் பெயரில்
சூழ்நிலைகள்..

முகம் காட்ட
முடியாது உன்னால்..
எனக்கே எனக்கென்று
இன்னும் மீதமிருக்கும்
சில நேரங்களிலாவது
வந்து போ..
இருள் சூழ்ந்த இரவின்
கருப்பு நினைவுகளாய்.
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jun 20, 2010

வாழ்க்கை..

எதுவுமே இவ்வளவு
அழகாய் கற்றுதந்ததில்லை
வாழ்க்கையை..
வாழ்க்கையை தவிர.
.........................................................
வென்மேகத்திலிருந்து
இறங்கி வந்த
தேவதை ஒன்று
இரக்கம் இருந்தால்
கொஞ்சம் தாயேன் என்றது.
அதை இதயம்
இருப்பவனிடம் போய்
கேள் என்றேன்.
திரும்பி செல்ல
எவ்வளவு எவ்வளவு
தடுமாறியது தேவதை.
'ஐயோ.. பார்த்து '
என்றேன்..
சட்டென திரும்பி
'இப்படித்தானே
சக மனிதர்களிடமும்
நடந்து கொள்வாய்'
என்று சிரித்தது.

ம்.. இன்னும் நிறைய
ரௌத்திரம் பழக்க வேண்டும் மனதை.
.....................................................................
எவ்வளவு விசாலமாய்
பயணித்தாலும்
திரும்பி வரவே முடியாத
ஒற்றையடிப்பாதை..
வாழ்க்கை.
..........................................................






Jun 16, 2010

நேசம்..

காலங்கள் மாறிவிட்டன..
கனவுகளும் கரைந்துவிட்டன..
காயங்கள் மட்டும்
இன்னும் ஆறாமல் அப்படியே..


தனிமையில் நெஞ்சம்
தறிகெட்டு ஓடுது..
நினைவுகளின் பிடியில்
சருகாய் ஆகுது.


சுடும் நெருப்பென்று
தெரியாமல்
சுகமளிக்கும் பனிதுளிஎன்று
சேர்த்துவைத்துவிட்டேன் உன்
புன்னகைகளை என்னிதயத்தில்..

எரியும் நிலவென்று
தெரியாமல்
சிரிக்கும் பூவென்று நினைத்து
பதித்துவைத்துவிட்டேன்
என் கண்களில் உன் முகத்தை..

முட்களோடுதான் வாழ்க்கை
என தெரிந்தும் சிரித்துக்கொண்டே
மலர்ந்திருக்கும் ரோஜாவை
போல்தான் நானும்..

ம்ம்.. ஆண்டாண்டு காலம்
கடந்தாலும் உனக்கான என்
பிரியங்களை ஒருபோதும்
உணரபோவதில்லை நீ..

என் காலம் உள்ள
காலம் வரை உன் மீதான
என் பிரியங்களும் கரையப்போவதில்லை...
.......................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 29, 2010

எனக்கான சொந்தம்..

நீ சூடும் பூக்களெல்லாம்
உதிர்வதாகவே நான்
நினைப்பதில்லை.
என் மனதோடும்..
மூடப்பட்ட என்
புத்தகத்தின் ஏதேனுமொரு
பக்கத்திலும்
பூத்துக்கொண்டுதானிருக்கின்றன..
இன்றுவரை.
............................................................
என் நினைவெங்கும்
உன் வாசம் ..
நாளெல்லாம் என்னில்
வீசும்..
நினைவுகளால்
உன்னை சூட
மனதெங்கும்
மழைசாரலடி..
கவிதையாய்
உன்னை பாட
என் உலகெங்கும்
புது வசந்தமடி.
..........................................
நீ வரமாட்டாய் என
தெரிந்தும்
பூச்செடிகள்
வளர்த்து வைத்திருக்கிறேன்
என் வாழ்வில்.
உன் நினைவுகளாவது
சுகமாய் இருந்துவிட்டு
போகட்டுமே.
.................................................
நீ பூக்களை சிந்துகிறாய்
என்றால்..
இல்லை நான் புன்னகை
சிந்துகிறேன் என்கிறாய்..
கவிதை எழுதி காட்டினால்
அது என் பெயரென்று சொல்கிறாய்..
இப்போது சொல்கிறேன்..
நீ கட்டி இருப்பது
சேலைதான் என்று..
நீயும் எப்போதும் போலவே
இல்லை..அது உன் காதல் என்கிறாய்..
பூக்களை சிந்திக்கொண்டே.
. .................................................................................
உன் கூந்தல்
பூக்களை போலவே
என் பிரியங்களையும்
மிக சுலபமாய்
எடுத்தெறிந்து விடுகிறாய்..
அதற்காக பூக்களை போல்
அவை வாடிவிடுமென
எண்ணிவிடாதே..
அவை காலங்கள்
தாண்டியும் உன்னை
சொந்தமென கொள்ள
ஆசைபடுகிறது.
.......................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 13, 2010

என் மனதோடு நீ..

பாட்டி சொல்லும்
கதைகளில் வரும்
தேவதை பெண் நீ..
கதை கேட்கும்
பிரமிப்புகள் அகலாத
சிறுவன் நான்.
இன்னும் எத்தனை
நாட்களானாலும்
அதிசயம்தான் நீ எனக்கு.
...............................................
போகின்ற போக்கில்
என் வீட்டு தோட்டத்து
பக்கமும் வந்து போ..
அவை சாகா வரம்
பெற்று வாழ்வதை
பார்க்க ஆசையாக
இருக்கிறதெனக்கு.
............................................
கவிதை
மிகப்பிடிக்கும் எனக்கு..
உன்னை போலவே.
அதற்காக உன்னை
கவிதையென்று
சொல்லமாட்டேன்.
கவிதைக்குள்
அடங்காதவள் நீ.
...........................................
நான் சொல்லி
நீ ரசிக்கவோ..
அல்லது
நீ சொல்லி
நான் ரசிக்கவோ..
இன்னும் எத்தனையோ
மிச்சமிருக்கின்றது.
நமக்கான நேரங்களிருந்தால்
கண்டுபிடுத்து சொல்.
..........................................................
உன்னை சந்தித்த
நாள் நினைவில் இல்லை..
சந்திக்கபோகும் நாளும்
எதிரில் இல்லை.
ஆனாலும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்..
என் மனதோடு.
.......................................................
நீ என்ற
ஒற்றை பிம்பம்..
என்னில் கடக்கமுடியா
பெருவெளியாய்.
....................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 31, 2010

கண்ணாடி பொம்மை..

அடர்ந்த பனி பொழிவினூடே
மெரூன் வர்ணத்தில்
கண்ணாடி பொம்மை ஒன்று

நெருங்கி வா..
பேரானந்தம் என்றது.
நெருங்க நெருங்க
காயங்களை தருமென்று
தெரியாமல் போய்விட்டதெனக்கு.

சிந்தித்து பார்..
உன்னை நெருடவில்லை
நெருங்குகிறேன் என்றது
என் சிந்தனைகளை
முடக்கி வைத்துவிட்டு.

நினைவுகளில் இதமாகவும்
சமயங்களில் ரணமாகவும்..
கனவுகளில் சுகமாகவும்
சமயங்களில் சுமையாகவும்
எப்போதும் என்னுடனே
இருக்க பழகிவிட்டது அது.

நானே அறியாமல்
மெல்ல மெல்ல
மிக நுட்பமாய் என்
சுயங்களை திருடி எங்கோ
ஒழித்து வைக்க தொடங்கியது.

மெல்ல மெல்ல சிதைந்து
தனிமையில் புதைந்து
ஆழ்மனத்தின் ஏதுமற்ற வெளியில்
மிக மிக நிதானமாய்
பயணிக்கும்போது
சர்வ நிச்சயமாய்
என்னால் உணர முடிகிறது.

அது கண்ணாடி பொம்மையல்ல..
காதலென்று.
.................................................
ப்ரியமுடன்
லோகநாதன்.

Jan 18, 2010

முழுதாய் நான் தோற்றுவிட்டேன்..

எதிர்படும் எத்தனையோ
முகங்களில் மனதில்
பளிச்சென்று பதியும்
சிற்சில முகங்களில்
ஒன்றாகவோ..

சூழல் மறந்து
தாய்மையை
ரசிக்க வைக்கும்
மழலையின் மந்திர
புன்னகையாகவோ..

கண்ணாடி முன்
நிற்கும்போதெல்லாம்
சட்டென்று ஞாபக செல்களில்
தெறித்து செல்லும்
விநாடி நேர
நினைவுகளாகவோ..

நாள் முழுதும்
நனைந்திருந்தாலும்
வீட்டில் நுழைந்ததும்
ஜன்னல் கம்பிகளில்
பட்டு தெறித்து முகம்
சிலிர்க்க வைக்கும்
அந்தி நேரத்து
மழை சாரலாய்..

இன்னும் எப்படிஎல்லமோ..
உன்னுள் எந்தன் இருப்பை
உணர செய்ய முயன்று
முழுதாய்
தோற்றுவிட்டேன் நான்.
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 13, 2010

நானும்.. எனக்கான நீயும்..

உறவுகள் மீது
நம்பிக்கை இழந்து விட்டேன்..
கூடவே நட்புகள் மீதும்..
காதல் மீதும்..
என் எல்லாமே நீதானென்று
வாழ்ந்தது சத்தியமாய்
என் தவறுதான்.
..............................................
ஏமாற்றங்கள்
இயல்பாய் நிகழும்..
எதிர்பார்ப்புகள்
இருக்கும்வரை..
எதிர்பார்க்காதே..
யாரிடமும்..
எதுவும்.
.............................................
மனதெங்கும்
உன்னை
காணவேண்டுமென
ஏக்கம்தான்..

ம்.. கிணற்று தவளை
கத்துவது ஊருக்கு
கேட்கவா போகிறது?
...............................................
இயல்புகளை மீறிய
ஒன்றுதான்..
உனக்கும் எனக்குமான
சொந்தம்.,
அதற்காக நீ
இயல்புகளை
இழந்து விடாதே..
பிறகு வழிகள் மறந்து
வலிகள் மட்டுமே
தெரியும் உனக்கு.
...............................................
எப்போதும் போல
இனி எப்போதும்
பொய் சொல்ல
அறிவை பழக்கி கொள்கிறேன்
அல்லது சுத்தமாய்
அழித்தொழித்து விடுகிறேன்..
தினமும் 'எப்படி
இருப்பாய் நீ' என
கேட்கும் ஏன் வீட்டு
தோட்டத்து பூக்களையும்..
என் மனதையும்.
................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 4, 2010

வெறுமை..

ஈரமில்லா இடத்தில்
செடிகள் நட்டு
ரசசனைகளை புதைத்து
பூக்கள் வளர்க்க
ஆசைப்படுவதை போல்தான்
இதயத்தை தொலைத்து
இருட்டினில் வாழும் உன்னிடம்
அன்பையும் நேசத்தையும்
யாசிக்கிறேன் நான்..

யாராலும் எட்ட முடியா
அடர்ந்த தனிமைகளில்
பயணம் செய்ய போகிறேன் இனி..
அங்கே உன் உயிரை கொள்ளும்
பிரியங்களும் ..
நெஞ்சம் வதைக்கும்
நேசங்களும் துணை வரப்போவதில்லை.
வழித்துணையாக வரப்போவதெல்லாம்
ஆழ் மனதின் வெறுமைகளும்..
சிற்சில கவிதைகளும்தான்.

மற்றவரை துன்புறுத்தும்
விருப்பங்கள் வேண்டாம்..
நம்மை வஞ்சிக்கும்
இலக்குகள் வேண்டாம்..
போகின்ற போக்கில்
வாழ்ந்து பார்க்கிறேன்
வாழ்க்கையை..

வாழ்க்கையின் ஆதாரமே
கொஞ்சம் நம்பிக்கையும்..
நிறைய்ய நேசமும்தான் ..
உணர்ந்திருந்தும்
வெறுமையை விரும்பும்
நானும் ஒரு மனிதன்தான்.
.................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 1, 2010

என் காதல் கண்மணியே..

குழந்தையாய் மாறி
புத்தாண்டு வாழ்த்துகள்
சொல்லிகொண்டிருக்கிறாய்
எனக்கு.
உன்னை பார்க்கும்
நேரங்களில் எல்லாம்
நானே புதிதாய்
பிறந்து வருகிறேன்
என்பதை அறியாமல்.
.......................................................
இனிமேல் தயவு செய்து
கண்களை நிமிர்ந்து பார்க்கவோ..
அல்லது யாரிடமும் சிநேகமாக
புன்னகைக்கவோ செய்யாதே..
ஒரு இதயம் சிதைந்து
கொண்டிருப்பதே போதும்.
........................................................
எல்லோருக்கும் கொடுத்தே
பழகியவள் நீ..
என்னிடம் மட்டும் எடுத்து செல்கிறாயே..
இதயத்தை.
.......................................
"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.."
"என்னடா?"
"நியூ இயர்க்கு என்ன ஸ்பெஷல்?"
"ஒண்ணுமில்லடா.."
"அப்ப ஒன்னு பண்ணு.."
"என்னடா..?"
" தின்னுட்டு மாமன நெனச்சு
கனா கண்டுக்க.."
"அதன் டெய்லி கண்டுகறேனே.."
"அப்போ போரடிக்குமா..?"
" அதன் இல்ல.. டெய்லி
கனவுல வந்தாலும்..
நீ மட்டும் புதுசாத்தான் தெரியிற எனக்கு.."

அட.. இந்த காதலிகளுக்கு
எவ்வளவு அழகாய்
காதலிக்க தெரிந்திருக்கிறது.
........................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 29, 2009

ஏய்.. செல்லம்மா..

உனக்கென ஒரு
மழைகாலம் செய்து
வைத்திருக்கிறேன்..
வா..
சேர்ந்து நனைவோம்
நம்மை மறந்து.
..............................................
மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்.
.....................................
காலம் நேரம்
சேர்ந்து வாழ்த்தும்
தென்றலாக..
நீயும் நானும்
வாழ்ந்திருப்போம்
பூவும் வாசம் போலே.
..........................................
எத்தனை நாளைக்குதான்
வெறும் சேலைகளையே
கட்டிக்கொண்டிருப்பாய்..
ஒரு நாளைக்கு
என்னையும்தான் கட்டிக்கொண்டு
போய்ப்பாரேன்..
அப்புறம் சேலை கட்டவே
யோசிப்பாய் நீ.
.........................................................
செந்தாழம்பூவுக்கு
கொண்டாட்டம்..
நேற்று பெய்த மழை.
அலைபாயும் என் மனதில்
சந்தோசம்..
நேற்று கனவில் உன் முத்தம்.
..........................................................

ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 13, 2009

வாழ்ந்து பார்க்கிறேனே..

இலக்குகளற்ற பயணத்திலிருந்தேன்..
இலக்காய் உன்னை நினைக்க செய்தாய்..
நினைத்து நினைத்து நெருங்கி
வரும்போதுதான் நெருப்பென
சுடுகிறது உண்மை..
உனக்கான இலக்கு நான் மட்டுமே அல்ல..

வார்த்தை என்றால் அது
இதழிலிருந்து அல்ல..
இதயத்திலிருந்து வரவேண்டும்..
புன்னகை என்றால் அது
இதயத்தை நிறைக்கவோ. .
அல்லது கரைக்கவோ..
காயங்கள் செய்யகூடாது.
உன் வார்த்தைக்கும்..
புன்னகைக்கும் இனி
சாத்தியமே இல்லை என தோன்றுகிறது.

நீண்ட நெடிய ஆங்காரமான
இரவுகளிலெல்லாம் அனலில்
பட்ட புழுவாய் துடிதுடித்து
பெரும் போராட்டத்திற்கு பின்
பேரமைதியாகும்போதே உணர்ந்து கொண்டேன்.
என் மனம் உன்னை விட்டு
விலக ஆரம்பிக்கிறதென்று.

இனி நான் கண்டு ரசிக்க
எதுவுமே தட்டுபடபோவதில்லை
என் கண்களுக்கு.
இனி நான் பேசி மகிழ
எந்த இரவுமே வாய்க்கபோவதில்லை
என் ப்ப்ரியங்களுக்கு.

பரவாயில்லை..
மீண்டுமொருமுறை
வாழ்ந்துதான் பார்க்கிறேனே..
ஆசைகளற்ற இயந்திரமாய் வாழ்க்கையோடும்..
வலிகளை மட்டுமே தரும் கொடிய தனிமையோடும்.
..........................................................................

ப்ரியமுடன்.
லோகநாதன் .

Oct 31, 2009

கண்ணாடி ஜன்னல் நீ..

மழையோடு மகிழ்ந்தாடி
மனதோடு கலந்திருக்கும்
மண்வாசம் போல..
என் மனதோடு உறவாடி
உயிரெங்கும் நிறைந்திருக்கும்
சுவாசங்கள் நீயடி.
........................................................
எப்படியும் கொஞ்ச
நேரம்தான் எனும்
உண்மை அறியாமல்
பேருந்து பயணத்தில்
ஜன்னலோர இருக்கை
கிடைத்துவிட்ட
குழந்தையின் குதூகலங்கள்..
உனக்கும் எனக்குமான
நேரங்களில்.
.........................................
உனக்கென
காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்..
எனக்காகவே
வருகிறாய்
ஒவ்வொரு நாளும்..
நமக்கான காதல் மட்டும்
ஏனோ கண்ணாமூச்சியாய்.
..................................................
மழைத்துளிகளின்
நடுவே கண்ணீராய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான்..
உன்னை காதலென்று
நினைத்திருந்தால்
கரைந்து போயிருப்பாய்..
உயிரென்று நினைத்திருந்தால்
மறைந்து போயிருப்பேன்..
நீ கரையவுமில்லை..
நான் மறையவுமில்லை.
.................................................
தொட்டவுடன்
உடைந்து விடும்
கண்ணாடி ஜன்னல்தான் நீ..
அதற்காக என்
காதலையுமா
தாங்க முடியவில்லை உன்னால்?
...........................................
சுகந்தமாய் வாழ்ந்து
பார்க்கிறேன்
உன் நினைவுகளோடு..
உதிர்ந்த மலரின்
கலையாத வாசங்களாய்..
நிறைந்த மனதில்
புரியாத ஏக்கங்கள்.
......................................

Sep 29, 2009

கண்மணிக்கு..

கவிதையாய்
என் நெஞ்சில்
வாசம் செய்கிறாய்..
ஆனால் நான்
ரசனைகள்
தொலைத்து நாட்கள்
மாதங்களாகி விட்டன.
..........................................
நாட்கள் மாதங்களாகலாம்..
மாதங்கள் வருடங்களாகலாம்..
அதனால் என்ன..
என் காதல்
குறைந்துவிடவா போகிறது..
காதலுக்கேது காலமும்.. நேரமும்..
....................................................
காலமும் நேரமும்
காத்திருக்க போவதில்லை
உனக்காக..
உனக்கான சொந்தங்கள்கூட
உனக்காய் கடைசீ வரை
காத்திருப்பதென்பது
இயல்புகள் மீறிய ஒன்றுதான்..
என் காதல் காத்திருக்க
ஆசைப்படுகிறது..
என் கல்லறைமீது
பூக்களாய் பூத்தேனும்.
...............................................
கல்லறை மீது
பூத்ததை தவிர
வேறென்ன பாவம் செய்தன
கல்லறை பூக்கள்..
கூந்தல் ஏறவும் முடியவில்லை..
பூஜைக்கு போகவும் முடிவதில்லை..
அப்படியே சில இதயங்களும்..
நேசம் வைத்த
பாவத்தை தவிர
வேறெந்த பாவமும்
அறியவில்லை என்றாலும்..
வாழவும் முடிவதில்லை..
சாகவும் முடிவதில்லை.
....................................................................

Sep 7, 2009

என் காதல்..

நட்சத்திரங்களுடன்
கைகோர்த்து
முப்பத்து முக்கோடி
தேவர்கள் அண்ட் தேவதைகள்
சுகந்தம் பாட..
நகரும் நிமிடங்களோடு
கைகோர்த்து
பூக்களும் தோரணங்களும்
கவிதை பாட..
இதழ் நிறைய புன்னகை
சிந்தும் உறவுகளும்..
மனம் நிறைய வாழ்த்துகள்
சொல்லும் உள்ளங்களும்
நிறைந்திருக்க..
உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..

இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்..
கனவில் தினமும்
நினைத்து தொலைக்கிறது.
என் காதல்.
.................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Aug 24, 2009

உணர்வு நீ..

வெறும் வார்த்தைகளாகவோ..
அல்லது உன் செய்கைகளில்
அன்னியமகவோ எனக்கு
உணர்த்தியிருக்கலாம் நீ..
ஏன் உன் வார்த்தைகளில்
பரிவையும்..
உன் செய்கைகளில்
காதலையும்
கொட்டி வைத்தாய்..
இப்போது பார்..
நலமாய் வாழ்வான் என
நீ நினைத்திருக்க..
இங்கே யாரும் அறியாமல்
மிக நுட்பமாய்
பைத்தியமாகிகொண்டிருக்கிறேன் நான்.
..........................................................................
என் உலகம் முழுதும்
உன் நினைவுகளால்
சூழப்பட்டு அதற்கான
கதவுகளாலேயே
அடைத்துக்கொண்டு விட்டது.
நானும் அவ்வப்போது
ஒவ்வொன்றை உடைத்து
வெளியில் வர
முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்.
இன்னும் முழுதாய் வந்தபாடில்லை.
ஒருவேளை என் காலம்
முழுதும் இப்படியே
சென்று விடுமோ..
........................................................................
ஒரு சர்வாதிகாரியை போல
என் நெஞ்சில் சிம்மாசனமிட்டு
ஆங்காரமாய் அமர்ந்திருக்கிறாய்..
நீ இருக்கிறாய் என்று
ஆணவமாய் நடைபோட வேண்டிய
நானோ இன்று அழுதுகொண்டு.
.....................................................................
மழையை கண்டாலே
மகிழ்ந்தாடும் என் மனதிற்கு
இப்போதெல்லாம் மழை நாட்களை
கண்டாலே பயமாய் இருக்கிறது .
எப்போதும் போல அது
மனதை நனைத்து செல்லாமல்
இப்போதெல்லாம் மிக ஆழமாய்
காயங்கள் செய்யவும் செய்கிறது.
உன் நினைவுகளால்..
.....................................................................
இதுவரை எவ்வளவோ
தொலைத்தாயிற்று..
ஒன்று கூட என் மனதில்
ஆழமாய் சலனம்
ஏற்படுத்தியதில்லை..
உன்னை தவிர.
..................................................................

Jul 28, 2009

மனசின் வார்த்தைகளின்மை..

முகம் மூடி
வைத்துகொண்டால்
முக(ம்)வரி மறந்து விடுமா?
இதழ் மூடி
வைத்துக்கொண்டால்
வார்த்தைகள்
தொலைந்து விடுமா?
இமைகள் பாரமென்று
கண்கள் சொல்லாதடி..
நினைவுகள் சோகமென்று
இதயம் வெறுக்காதடி....
கெஞ்சும் உன்னை கெஞ்சும்
உன் வெட்கம் கண்டு கொஞ்சும்..
நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
உன் மடியில்தான் தஞ்சம்..
மூடிவைக்கவா நான்
ஆசைகள் வளர்த்தேன் பெண்ணே..
உன்னை பிரிந்து செல்லவா
நான் காதல் வளர்த்தேன் பெண்ணே..
சொல்லி புரிவதில்லையடி காதல்
சொல்லவும் வார்த்தைகள்
இல்லையடி என்னிடம்..
ஆம் பெண்ணே..
வலிகள் என்றால் என்னவென்று
சொல்லி தருகிறதடி..
மனசின் வார்த்தைகளின்மை.
...............................................

Jul 24, 2009

ஜமால் அண்ணாவுக்கு பிறந்தநாள்..

உறவுகளையெல்லாம் தாண்டி
என் உயிருக்கு மிக மிக
நெருக்கமாய்..
மயக்கங்களைஎல்லாம் தாண்டி
என் மனதுக்கு மிக மிக
இதமாய்..
எழுதும் வார்த்தை வசந்தமாய்..
சொல்லும் சொல்லில் சுகந்தமாய்..
வாழும் வாழ்க்கையில் வாசங்களாய்..
எல்லைகள் தாண்டி
ஏகாந்தமாய் வாழும் கவிதை
உனக்கு இன்று பிறந்தநாள்..
உன்னை வாழ்த்தினால் அவை
வெறும் வார்த்தைகளாகி போகும்..
வாழ்க பல்லாண்டு..
வணங்கி மனம் நிறைகிறேன்..
அல்லது..
நீ.. நானாகி
கர்வப்பட்டுகொள்கிறேன்.
- இப்படிக்கு..
உன் உடன்பிறவா சகோதரன்.

Jul 9, 2009

உன்னை நினைத்தே..

உன் நினைவுகளினூடே
தேடிப்பார்க்கிறேன் என்னை..
எங்கும் தட்டுப்படவே
இல்லை நான்..
அடிபாவி..
இப்படியா முழுவதுமாய்
என்னை ஆட்கொள்(ல்)வாய் நீ..
...............................................................
இடரும்போதெல்லாம்
இதமாய் தாங்கி பிடிக்கும்
உன் ப்ரியங்களால்தான்
இன்னும் கொஞ்சமேனும்
நல்லவனாய் இருக்க
முடிகிறது என்னால்..
நன்றியடி பெண்ணே..
என்மீதான உன்
தொலைந்துபோன
பிரியங்களுக்கு.
..............................................
சோலையின்
சுகந்தமாய்..
தென்றலின்
வசந்தமாய்..
தனிமை
இனிமையாய்..
நெஞ்சின்
ரணமாய்..
வாழ்க்கையின்
ஆதாரமாய்..
இன்னும் எத்தனை
முகம் இருக்கும்..?
உன் நினைவுகளுக்கு.
................................................
பொன்னேரம் இந்நேரம்
பூங்காத்தும் தாலாட்ட..
பூவாசம் வந்தாட..
ராசாத்தி உன் நினைவால்..
என் மனதில் தேரோட்டம்.
......................................................
களவு
கற்று மற..
காதல்..
கற்றவுடன் இற.
................................
வசந்தம்
வரும்போதெல்லாம்
இயல்பாய்
செழித்திருக்கும்
சோலையை போல்தான்..
உன் நினைவுகள்
தொடும்போதெல்லாம்
தானாய் சில்லிடுகிறது
என் இதயம்.
...................................................

Jul 7, 2009

நினைவோ ஒரு பறவை..

விதி வழி
போகும் வாழ்க்கை..
காதல் வழி
போகும் மனம்..
எந்த வழியில் வரும் ?
நிம்மதி..
........................................
கூந்தல் வாழ
ஆசைப்படும்
பூவுக்கு வாழ்க்கை
தொடர்வதுமில்லை..
காதல்கொண்ட
மனதிற்குள் நிம்மதி
இருப்பதுமில்லை..
இரண்டையும்
ஓரிரு நாட்களிலேயே
கசக்கி எறிந்துவிடுகிறார்களே..
இந்த பெண்கள்..
.......................................
இரண்டுமே
எட்டி பிடிக்கும்
தூரம்தான்..
என்னதான் முயன்றாலும்
கடைசீ வரை
கையில் கிடைக்கவே இல்லை..
நீயும் .. என் வாழ்க்கையும்..
................................................
என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய்
இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய்
வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே
உன்னால்..
......................................
ஆண்கள் இதயம் தர
எந்த நிபந்தனையும் இன்றி
திரும்ப இலவசமாக
தருவார்கள் பெண்கள்..
.
.
கண்ணீர்..
...............................................
...........................................