Feb 22, 2011

சுகம்தாங்கி கற்கள்.

எப்போது முத்தம் கேட்டாலும்
முறைத்துக்கொண்டே
திரும்பி நின்று கொ(ல்)ள்கிறாயே..
தெரியுமாடி உனக்கு..
பின்னங்கழுத்தில் முத்தமிட கூடாதென்று
காதலில் எந்த விதியும் இல்லையென.
***************************************
எப்போதும் சுமைகளையே
தாங்கும் சுமைதாங்கி கற்கள்
நீ அமரும்போது மட்டும்
சுகம்தாங்கி கற்களாகின்றன.
*************************************
நிலவை காட்டினால்தான்
சாப்பிடுவேன் என அடம்பிடித்த
குழந்தை எதிரில் வந்த
உன்னை பார்த்ததும்
சிரித்துக்கொண்டே சாப்பிட
தொடங்குகிறது.
***************************************
வெறுமனே என்னை பார்த்து
புன்னகைத்து சென்றால்
துள்ளி குதித்து கும்மாளமிடுகிறது
இந்த மனசு.
இனிமேல் கூடவே ஒரு
முத்தமும் வைத்துவிட்டு போ..
மூர்ச்சையாகி கிடக்கட்டும்.
***************************************
அது எப்படி..
நீ ஏறிய பின்பு
பேருந்து
பேரழகுந்தாகிறது.
*****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

மடி சாயும் வரம்..

உன் கைவளைகள் சொல்லவில்லையா
மனதோடு என் பெயரை..
தினம் கண்மூடும் நேரங்கள் சொல்லவில்லையா
கனவோடு என் நேசங்களை..
அஞ்சாறு நிலவுகள் சேர்த்தே அழகாக செய்தானம்மா
ஒரு நூறு மீனாட்சி பார்க்கின்றேன் உன் முகத்தில்.
நீ பொட்டு வைக்கும்போதெல்லாம்
சொல்லியிருக்குமே உன் வீட்டு கண்ணாடி
அது பொட்டல்ல என் உயிரென்று..
அள்ளி பூச்சூடும் போதெல்லாம்
சொல்லியிருக்குமே அதன் வாசங்கள்..
அது வாசமல்ல என் நேசம் என்று..
தங்க மீன் செய்து வளர்த்தாலும்
அது மிரட்டும் முட்ட கண்ணை போலாகுமா?
வெள்ளி மலரொன்றை பரிசாக பெற்றாலும்
அது ரசிக்கும் உன் புன்னகை போலாகுமா?
வரங்கள் அள்ளி கொடுத்தாலும் வேண்டாமேன்பேன்
உன் மடி சாயும் நிமிடங்கள் போதுமேன்பேன்.
**********************************************
ப்ரியமுடன்
லோகநாதன்.

Feb 16, 2011

நினைவெனும் மந்திரங்கள்.

நட்போ.. காதலோ..
பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
.
வேரூன்றாமல் வளர்ந்து
நீரூற்றாமல் பூக்கும்
பூக்களவை.
.
சமயங்களில்
உற்சாக பேரூற்றாய்
உயிரோடு பொங்கும்.
சந்தர்ப்பங்களில்
கொடிய விஷமாய்
மனதோடு ஏங்கும்.
.
வேண்டாம் என்று
தள்ளி வைத்தாலும்
சுயங்கள் திருடும் கலையை
இயல்பாய் கற்று வைத்திருக்கின்றன.
.
எதிர்வரும் இயல்பான
முகத்திலோ அல்லது
எதிர்பாரா ஒரு சில
செயல்களிலோ சட்டென்று
ஒட்டிக்கொ(ல்)ள்ளும்.
.
நட்போ.. காதலோ..
பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
நினைவென்னும் மந்திரங்களை.
*******************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

மனமுதிரும் காலம்.

கொஞ்சம் கூட
உறுத்தவே இல்லை.
இலையுதிர்கால மரங்கள்.
.
.
துணை.
***********************************************
பூஜைக்கு போவேனா மாட்டேனா
கேட்டுவிட்டு பூப்பதில்லை.
.
.
கல்லறை பூக்கள்.
**************************************
ரசிக்க எத்தனையோ உள்ளன.
ரசிக்கும் மனம்தான் கேள்வியாகிறது.
.
.
பிரிவுகள்.
******************************
பறக்க ஆசைப்படும்
சிறகொடிந்த பறவையை போல்
தடுமாறுகின்றன
நமக்கான நேரங்கள்.
.
.
மனசின் வார்த்தைகளின்மை.
********************************
எப்போதும் வெறுப்புகளை
உமிழ்ந்தாலும்
தேவதையாக வாழ
தெரிந்திருக்கிறது.
.
.
காதலி.
**************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 13, 2011

பொருளற்ற கவிதைகள்..

என்னதான் அழகாய் இருந்தாலும்
ரசிக்கப்படாமல்
கிழித்தோ அல்லது கசக்கியோ
எறியப்படும் யாரோ ஒருவரால்..
பொருளற்ற கவிதைகள்.
ம்ம்.. கவிதையும் காதலும் வேறல்ல.
***************************************
கொஞ்சி கொஞ்சி
கரைதிருக்கலாம்தன்..
வெட்கம் என்றால்..
வெறுப்புகளை என்ன செய்ய?
**********************************
நீரை சுமக்கும் மேகங்கள்
பாரத்தை அவ்வப்போது
இறக்கி வைத்து கொள்கின்றன
மழையாய்..
உன் நினைவை சுமக்கும்
இதயம் என்ன செய்யும்..
கண்ணீரும் இல்லை என்னிடம்.
************************************
உன் வருகைகளுக்கான
அதீத எதிர்பார்புகள் இல்லாத நான்..
உன் வார்த்தைகளுக்கான
மயக்கம் இல்லாத நான்..
உன் சந்தோஷங்களுக்கான
தேடல் இல்லாத நான்..
நூலறுந்த பட்டத்தை
உற்று கவனிக்க தோன்றுகிறது எனக்கு .
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 11, 2011

கடைசியாய்..



"ஹாய்.."

"வந்துட்டியா.. வாடி குட்டி.."
"இந்த குட்டி பட்டிலாம் வேணாம்.."
"சரி விடு.. குளிச்சிட்டியா?"
"ஓ.. ஆச்சே.."
"அடடா..போச்சே.."
"என்ன போச்சு?"
"ம்ம்.. நான் இதுவரைக்கும்
பொம்மையை குளிப்பாட்டியதே இல்லையடி..
அதான் நீ குளிக்கலேன்னா குளிப்பாட்டி விடலாமேன்னு பார்த்தேன்.
சரி விடு.. சாப்டாச்சா?"
"ம்ம்.. ஆச்சே.. நீ?"
"அட.. அதும் போச்சா?"
"ஏன் பொம்மைக்கு ஊட்டி விட போறியாக்கும்?"
"அட லூசுபுள்ள.. பொம்மை சாப்ட்டு எங்காச்சும் பாத்திருக்கியா?"
"பின்ன?"
"ஹிஹி .. கொழந்தைங்களுக்கு நான் இதுவரை
ஊட்டி விட்டதே இல்லையடி.. அதான் கேட்டேன்."
"ஏய்.. இந்த மாதிரில்லாம் பேசாதே..
அப்புறம் நான் போய்டுவேன்.. "
"சரி.. சரி.. விடு.. மத்தியானம் தூங்குவியா?"
" அதெல்லாம் இல்ல .. ஏன் கேக்குற?"
"ம்ம்.. பூக்கள் என் மடி சாஞ்சு பார்த்ததே இல்லையடி..
அதான் நீ தூங்குனா.. உன்ன மடியில சாய்த்து ... "
"அடேய்... "


சட்டென்று கலைந்துவிட்டது.
விழியோரம் உணர்ந்த ஈரத்தால்.
முழுமையாக உன் நினைவுகளிலிருந்து
கலைந்து திரும்பலாமென நினைத்து
கடைசியாய் என் இருப்புகளை சரிபார்த்துகொண்டேன்.
காணவில்லை மனதை மட்டும்.
கடந்து சென்றதுதான் உன்னுடனான
இறுதி பயணம் என்பதை அறியாமல்
இன்னும் உன்னை கொஞ்சிகொண்டோ
அல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது.
********************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.