Jan 21, 2009

. . ல் த கா சை ஆ

பூக்களை போன்று
மென்மையானதுதான் என்றாலும்
பூக்களை போன்று
சில நாட்களில்
உதிரக்கூடியதல்ல
என் காதல்..
அது காலங்கள் தாண்டி
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.
.......................................................
நிலவைபோன்று
இனிமையானதுதான் என்றாலும்
எதோ சில நாட்களின்
நீண்ட இரவுகளில்
தீர்ந்து விடக்கூடியதல்ல
என் காதல்..
அது என் காலம் உள்ள காலம் வரை
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.
...........................................................
'இது எனக்கான சொந்தம்'
ஓயாமல் கரையை தேடி வரும்
அலையை போல்தான்
என் காதலும்..
'இவள் எனக்கானவள்' என
உன்னுடன் கம்பீரமாக
நடைபோட ஆசைப்படுகிறது.
......................................................
உலகம் போற்றும்படியாக
இல்லாவிட்டாலும்..
உன் உள்ளம் நிறையும்படியாகவாவது
வாழ்ந்துவிட்டு போக
ஆசைப்படுகிறது என் காதல்.
....................................................
கடவுளுக்கு தினமும்
சேவை செய்யும்
ஒரு நல்ல பக்தனை போல..
தன் தாயை
தன் நெஞ்சில் தாங்கும்
உண்மையான மகனை போல..
உனக்கான ஒவ்வொன்றையும்
பார்த்து பார்த்து செய்ய
ஆசைப்படுகிறது என் காதல்.
......................................................
ஒரு சின்ன கோபமாய்..
ஒரு செல்ல சண்டையாய்..
கொஞ்சம் ஆசையாய்..
நிறைய்ய சிணுங்கலாய்..
விடியும் நிமிடம் முதல்..
கனவுகளில் தொலையும்
நிமிடம் வரை..
உன்னோடு.. உனக்காகவே
வாழ ஆசைப்படுகிறது
என் காதல்.
.....................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Jan 9, 2009

முதற்கனவே..


















சட்டென நினைவுக்கு வருகிறது..
உனக்கும் எனக்குமான நிகழ்வுகள்..
சடசடவென பேரிரைச்சலுடன்
நம்மை கடந்து செல்லும்
அதிவேக ரயிலை போல்தான் ..
கண்மூடி கன நேரம் நின்றாலும்
இதமாய் வந்து இம்சை செய்துவிட்டு போகிறது..
முற்றுபெறா முதற்காதல்..

வகுப்பறைக்குள் நுழைந்த
மறுகணமே ஏகாந்தமாய்
என் மீது விழும்..
உன் பார்வை பனிமழையும்..
உன் புன்னகை பூமழையும்..

ஒரே வரிசையில்
அமர்ந்ததினாலோ என்னவோ..
இடம் மாறிக்கொண்டவை
ஏடுகள் மட்டுமல்ல..
நம் இதயங்களும்தான்.

வருகை பதிவேட்டில்
அடுத்தடுத்து பெயர்கள்
அதிர்ஷ்டமாய் அமைந்திருக்க..
எல்லோரும் வரிசையாய்
'பிரசன்ட் சார்' சொல்லிக்கொண்டு வர
நீ பார்ப்பாய் என்பதற்காகவே
கூப்பிடும் வரை
'பிரசன்ட் சார்' சொல்லாமலிருந்தவன் நான்.

பாடம் சொல்லும் பத்ரகாளி
வகுப்பறைக்குள் நுழையும் போதே
என் பெயர் சொல்லி ஏதேனும்
ஒரு வினா கேட்டுக்கொண்டே வர..
'இதே பொழப்பா போச்சு'
மூச்சுவிடாமல்
முனகிக்கொண்டே நான் எழுந்து நிற்க..
'களுக்'கென்று
ரகசியமாய் சிரித்துகொள்வாய்..
ரகசியங்களை ரசிக்கவே
பலமுறை பதில் சொல்லாமலிருந்தவன் நான்.

மகிழ்ச்சியாய் மட்டம் தட்டிவிட்டு
மறுநாள் வந்து வருகை பதிவேட்டை பார்க்கையில்..
உன் பெயருக்கு நேராய் மதியம்
விடுப்பென இருக்கும்..
சட்டென நிமிர்ந்து பார்க்க புரியாத
ஒரு பார்வை பார்ப்பாய்..
சடசடவென மழைத்துளி விழ ஆரம்பிக்கும்
பூமியில் அல்ல.. என் மனதில்..
புதிர்கள் புரிவதற்காகவே
பலமுறை விடுப்பு எடுத்தவன் நான்..

பாடம் படிக்கிறோமென
மரத்தடியில் அமர்ந்து
புத்தகங்களை படிக்காமல்
புன்னகைகளை படித்த
நாட்கள்தான் எத்தனை..

ஏதாவது பேசலாமென்று
எதிர்பார்த்து எதிரே வரும்போது
ஏதும் பேசாமல் ஏகாந்தமாய்
கடந்து சென்ற நாட்கள்தான் எத்தனை..

அத்தனைக்கும் அச்சாரமாய்
ஆட்டோகிராபில் அழுத்தமாய்
பதித்து தந்தாய் உன் இதயத்தை..
அள்ளிக்கொள்ளத்தான் ஓடோடி வந்தேன்..
உன் அழகு விழிகள் அழுதுவிடுவேன் என
மிரட்டியதால் தள்ளி சென்று விட்டாய்..

ஒருவேளை என்னைபோலவே
நாம் அமர்ந்திருந்த
நம் வகுப்பறையும்..
நாம் அமர்ந்திருந்த அந்த
மர நிழலும் . .
இன்னும் சொல்லிக்கொண்டிருக்குமோ..
சொல்லாமற்போன நம் காதலை..

மீண்டும் சொல்கிறேன்..
சடசடவென பேரிரைச்சலுடன்
நம்மை கடந்து செல்லும்
அதிவேக ரயிலை போல்தான் ..
கண்மூடி கன நேரம் நின்றாலும்
இதமாய் வந்து இம்சை செய்துவிட்டு போகிறது..
முற்றுபெறா முதற்காதல்..
..........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Jan 3, 2009

என் ராசாத்தி..

உன் குறுநகையின்
ஓசை கேட்க
குயில் கூவ
மறக்குமடி..
உன் செந்தூர
பார்வை பட
செந்தாழம்பூ
மலருமடி..
நீ தாளெடுத்து
நடக்கையிலே
தாமரைப்பூ
மயங்குமடி..
உன் கொலுசு
சினுங்கையிலே
கொண்டசேவல்
வியக்குமடி..
உன் கூந்தல்
தழுவும் தென்றல்
நாணப்பட்டு -
மயக்கம் கொண்டு
பூக்கள் மீது
காதல் கொள்ளாதோ..
ஒரு வார்த்தை
நீ பேச - என் ராசாத்தி
என் உயிரும்
கரையாதோ..
..................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .