Nov 26, 2008

ஹய்யோ..

..........................................
ஆர்பாட்டமான
கடற்கரையில்
அமைதியாகத்தான்
பேசிக்கொண்டிருந்தோம்
சட்டென்று சிறு வாக்குவாதம்
உனக்காக சாகவும்
தயார் என்கிறாய் கண்ணில் நீரோடு.

ஹய்யோ.. இந்த காதலிகளுக்கு
கொஞ்சம் கூட அறிவே இல்லை..
அவர்களுக்காகவே வாழும்
நம் காதலும் அந்த காதலுக்காகவே
வாழும் நாமும்
அவர்களை இழந்துவிட்டு
எப்படி வாழ்வதாம் ?

யாராவது இந்த காதலிகளுக்கு
புரிய வையுங்களேன்.. ப்ளீஸ் ..
..........................................
எனக்கு மெரூன் ரோஜா
ரொம்ப பிடிக்கும்..
ஹய்யோ.. மல்லிகை
மனசை அள்ளுது..
பூக்களின் புராணம்
அடிக்கடி பாடுகிறாய்..
இனம் இனத்தோடுதான்
சேரும் என்பது
உண்மைதான் போல.
...................................................
" ஹாய் செல்லம்.."
"ம்"
"நான் ஒன்னு கேக்கட்டுமா"
"நீ என்ன கேப்பேன்னு எனக்கு
தெரியும்"
"அப்ப குடு"
"போடா நான் தரமாட்டேன்.."
முகம் வாட தொடங்கும்போதே
இச்சென்று பதிகின்றன
உன் இதழ்கள்..
ஹய்யோ..
உன் பிஞ்சு இதயத்தில் எப்படி
உன்னால் இவ்வளவு
காதலை சேர்த்து வைக்க முடிகிறது.
...................................................
"ஹலோ.."
"..........."
"ஹலோ .. ஹலோ.. ஹலோ.."
".........."
"இப்ப பேசறியா இல்லையாடா.."
" ஹாய் செல்லம்.."
"எரும மாடு.. தண்டம்..
எத்தனை ஹலோ சொன்னேன்
ஏன்டா பேசல"
" ஒண்ணுமில்ல..
என்னோட மொபைல்ல
மழை பெய்யுதோன்னு
சந்தேகமா இருந்துச்சி ..
அதான் பாத்துட்டு இருந்தேன்.."
"ச்சீய்.. போடா.."
ஹய்யோ.. எவ்வளவு அழகாய்
இனிக்கிறது உன் "ச்சீ .. போடா".
.............................................
"ஏண்டீ.. உங்க அப்பா
அம்மாவுக்கு அறிவே இல்லையா.."
" டேய் .. என்ன வம்புக்கு இழுக்காத..
நான் கோபமா இருக்கேன்.."
"பின்ன என்னடி..
உனக்கு இப்படி பேர் வச்சிருக்காங்க"
" எங்க பேருக்கு என்னவாம்?"
"உன்ன கூப்டும்போதெல்லாம்
இனிக்குது..
கம்முனு சர்க்கரைனு வச்சிருக்கலாம்"
"ஆரம்பிச்சுட்டியா.." ன்னு நீ
ஆரம்பிக்கும்போதே
ஆரம்பிக்கிறது உன் வெட்கம்.
ஹய்யோ.. வெட்கத்திற்கு
இத்தனை நிறங்கள் இருக்கிறதா.
.........................................................

ப் ரி ய மு ட ன். . லோ க நா த ன். .

Nov 25, 2008

'ம்..'

ஒரு நிலவை போல்தான்
நானும் என் காத்திருப்புகளும்..
தினம் தனிமையில்.
அந்த அலையை போல்தான்
நானும் என் நினைவுகளும்..
ஓயாமல் உன்னைத்தேடி.

காற்றாய் மாறிவிடுகிறேன்
உன் சுவாசம் மட்டும் வாழ..
ஒரு பூவாய் மாறிவிடுகிறேன்
உன் கூந்தல் மட்டும் வாழ..
கொடுத்தது இதயம்தான்
கொண்டது எதுவென தெரியவில்லை..
இழந்தது நிம்மதிதான்
இனி இருப்பது எது புரியவில்லை..
கண்கள் பார்த்தது சில நாட்கள்
காதல் சொன்னது சில நாட்கள்..
கானலாய் கொதிக்கும்
பிரிவோ இன்றுவரை..
தயக்கங்களில் மூழ்கி
சுயங்கள் தொலைத்து பின்
இனி சந்திப்பே வேண்டாம்
என நானும்..
தனிமைகளின் தவிப்புகளில்
மயக்கங்களின் இறுக்கத்தில் சிக்கி
சந்திக்க வேண்டும் என நீயும்..
கண்ணில்லா இறைவன்
ஜன சந்தடி மிக்க ஏதேனும்
ஒரு சாலையோரத்தில்
சந்திக்கவைத்துவிடுகிறான்..
'நல்லாருக்கியா..' என நீ கேட்கவும்..
'ம்..' என்ற ஒற்றை வார்த்தையில்
நான் பொய் சொல்லவும்.
.............................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Nov 24, 2008

இப்படிக்கு..

எத்தனை தரம்
வாடினாலும்
நீ சூடுவாய்
என்பதற்காக
மீண்டும் மீண்டும்
ஜனனம் எடுக்க
தோன்றுகிறது எனக்கு.
-இப்படிக்கு..
ரோசாப்பூ...
.......................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

என் காதல்..

என்றோ நாம் சேர்ந்து
சென்ற பயணங்களின்
சுவடுகளை இன்றும்
நினைவுபடுத்தும்
ஒற்றையடி பாதை..

மணிக்கணக்காய்
அருகருகே அமர்ந்திருந்தும்
எதுவும் பேசாமல்
மௌனங்களால் மனதோடு பேசி
அமர்ந்திருந்த
கோவில் படிக்கட்டுகள்..

உச்சி வெயில்தான் என்றாலும்
உன் அருகாமையினால்
உள்ளம் குளிர்ந்த
மந்திர நாட்கள்..

எல்லாம் வாடிவிட்டன
நீயின்றி..
என்றாலும்
என் காதல் மட்டும்
உன் நினைவுகளோடு வாழ்ந்தேனும்
ஆண்டாண்டு காலம்
பூத்துக்கொண்டுதானிருக்கும்.
..............................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Nov 22, 2008

காதலுடன்..

என் நினைவோடு
தந்ததை எல்லாம்
நிஜமாக தந்தவள்..
நீ..
நிஜமாக
தந்ததை எல்லாம்
நினைவாக்கி சென்றவள்..
.................................................
உதிரும் பூவோ..
கரையும் நொடியோ..
இனி ஒருபோதும்
மீளமுடியா சோகத்துடன்
உதிரவோ..
கரையவோ கூடாது..
என் காதலை போல..
................................................
யாருக்காகவும் காத்திரா
காலங்களை போல்தான்
என் காதலும்..
எதற்காகவும் உன்னை
விட்டு தரமாட்டேன்..
.....................................................
கல்லறை பூக்கள்
பூத்திருந்தும்
பூத்து சிரித்திருந்தும்
அவை கூந்தல்
ஏறமுடியா சோகம் சொல்ல
வார்த்தை ஏது?
காத்திருக்கும் காதல்
முகம் பார்த்திருந்தும்
சேரமுடியா சோகம் போல..
.......................................................
நீ இல்லா நாட்களில்
நிலவில்லா வானம் போல்
வெறுமையாகத்தான்
இருக்கிறது மனசு..
என்றாலும் பரவாயில்லை..
ஆங்காங்கே
நட்சத்திர குவியலை போல்
சிதறி கிடக்கிறதே..
உன் நினைவுகள்..
............................................
ஒரு நிமிடம்..
அல்லது
ஒரு ஜென்மம்..
உன் மடி சாய வேண்டும்..
இருக்கும்போதில்லாவிட்டாலும்
இறந்தபிறகாவது.
.........................................................
உன்னால் நான்
புனிதமடைந்தேனோ இல்லையோ..
நல்ல மனிதனானேன்.
ஆம்..
காதலின் ஆழம் அறியாதவன்
புனிதமானவனும் இல்லை..
கண்ணீரின் ஆழம் அறியாதவன்
நல்ல மனிதனும் இல்லை.
.............................................................
ஒரு நிமிடம்தான்..
அழகான தென்றல் போல
வந்ததும் சென்றுவிட்டாய்..
ஆனால் இன்னும் நிலைத்திருக்கிறது
உனக்கான என் நினைவு சுவடுகள்.
பிரிவுகளால் இதயம் உடைந்தாலும்
உடைந்தவற்றிலும் உனக்கான என்
காதல் நிலைத்திருப்பது போல..
.............................................
சிறு உயிருக்கும்
துன்பம் தரமாட்டேன்..
ஒரு பூ வாடினாலும்
என்னால் தாங்க முடியாது..
சொல்லிக்கொண்டே
பிரிகிறாய்..
என் இதயத்தை
உடைத்துவிட்டு..
..........................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

நமக்கான உலகம்..

நமக்கான உலகம்..
நமக்கான ரோஜா தோட்டம்..
புல்மீது பனியென
என் மடியோடு நீ..
எவ்வளவு நேரமோ..
சட்டென்று
எழுந்து தோள்சாய்கிறாய்..
கூடவே..
'கால் வலிக்கிறதா..'
கேள்வி வேறு..
அடி பைத்தியக்காரி..
நீ இருக்கும் வரைதான்
என் மடி மட்டுமல்ல..
மனதும் கூட
சுமை இன்றி
இருக்கிறது என்பதை
உனக்கு எப்படி
புரிய வைப்பேன் நான்..
..................................................
நமக்கான உலகம்..
நமக்கான ரோஜா தோட்டம்..

கண்மூடி கவலை மறந்து
உன் மடியோடு நான்..
சட்டென்று..
' நேரமாகிறது..
வா.. போகலாம்'
என்கிறது வார்த்தை வழி
உன் வெட்கம்.
கூடவே..
' இன்னும் எவ்வளவு
நேரம் வேண்டுமானாலும்
இப்படியே இருக்கலாம்'
என்று விரலால் தலை கோதும்
உன் காதல்.

உன் வெட்கத்திற்கும்
காதலுக்கும் இடையில்
சிக்கி அவஸ்தைப்படுகிறேன் நான்.
.............................................................
அழகாகத்தான்
புன்னகைத்துக்கொண்டு
எதிரே வந்தாய்.
சட்டென்று எதோ
தடுக்கிவிடுகிறது உன்னை..
உள்மனம் பதற..
' பார்த்து வரக்கூடாதா?'
என்றேன்.
'பார்த்துக்கொண்டுதான்
வந்தேன்டா'
என்கிறாய்.
'பிறகு எப்படி?'
என்றேன் எதுவும் புரியாமல்.
'உன்னைத்தானடா
பார்த்துக்கொண்டு வந்தேன்.
நீ எதிரே வரும்போது
எனக்கு வேறு எதுவுமே தெரிவதில்லை'
என்கிறாய் மீண்டும்
என்னையே பார்த்துக்கொண்டு.
.................................................................
அழகாகத்தான்
புன்னகைத்துக்கொண்டு வந்தாய்.
நானும் புன்னகைக்க..
'நலமா' என்றாய்..
'நலம்' என்றேன்.
'அப்புறம்' என்றாய்.
'ம்.. அப்புறம்..'என்றேன்.
'சரி.. வருகிறேன்'
போகவும் செய்தாய்..
சிலையான உணர்வுகள்
உயிர்த்த பின்புதான் தெரிந்தது..
நாமும் ஏதாவது
கேட்டிருக்கலாமோ என்று.
.................................................................
' உனக்கு ரொம்ப புடிச்சது என்னடா'
'ம்ம்ம்ம்ம் ... எல்லாமே..'
'எல்லாமேன்னா?'
'எல்லாமேதான்..'
'அப்பா நானும் அந்த
எல்லாத்துல ஒன்னுதானா?'
'இல்ல.. நீதான் என் எல்லாமே..'
..............................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Nov 21, 2008

புன்னகை சாரல்..

கனவானாலும்
நனவானாலும்
உன் முகம் ஒன்றை
மட்டுமே தேடும்
என் விழிகளின் ஏக்கங்கள்..

கடைசி வரை
வராமற் போனாலும்
உனக்காக காத்திருந்த
காத்திருப்புகளின் தாக்கங்கள்..

பேனா என்ற ஒன்றை
கைகளில் எடுத்தாலே
உன் பெயரை
எழுதி பார்க்கும்
என் விரல்களின் தேடல்கள்..

தினம் தினம்
காயப்பட்டாலும்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளையே
சொந்தம் கொண்டாடும்
என் இதயத்தின் வலிகள்..

என்றேனும்
எதிரில் வரும்
உன் ஒற்றை புன்னகையில்
கரைந்து விடும்
மாயம்தான் என்ன?
..............................................
உலகம் மயங்க
வானவில்லில் வர்ணம்
வைத்தவன்
உன் புன்னகையில் என்ன
வைத்தானோ..
நான் மயங்கிட..
............................................
அமைதியாகத்தான்
புன்னகைக்கிறாய்..
ஆனால் எல்லா
உள்ளங்களையும்
கொள்ளையடித்துவிடுகிறாய்..
ரோஜாவின் வம்சமா நீ..
............................................
நொடிக்கொருதரம்
பூத்தாலும்
பன்னிரண்டு வருடங்களுக்கு
ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி மலரை விட
அபூர்வமானதுதான்..
உன் புன்னகை.
........................................

ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன். .

காத்திருப்புகள்..

நீ

மலர் சூடி

ஒருமுறைகூட

நான் பார்த்ததில்லை..

என்றாலும்

பூக்களை எங்கு

பார்த்தாலும்

எனக்கு தோன்றும்..

உன் கூந்தல்

வாசம் செய்யவா

இந்த காத்திருப்புகள் என்று..

............................................

ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன். .

இது மழைக்காலம்...

மழை..
மண்ணுக்கு ஈரம்..

மனதுக்கு இதம்..
மழையை பிடிக்காதவர் யார்..
மழைக்கு பிடிக்காதவர் யார்..
ஏனோ எனக்கு மட்டும்
பிடிக்காமல் போய்விட்டது மழையை..
ஏதோ ஒரு நாளின்
அந்திப்பொழுதில் சாரலாய் பொழிந்து
உன்னை பார்க்கவிடாமல் தடுத்ததிலிருந்து..
...............................................................
நேரம் காலமில்லாமல்
உன்னால் முடிந்தவரை
பேசிக்கொண்டே இரு..
எனக்கு மழை என்றால்
ரொம்ப பிடிக்கும்..

உன் ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஒரு மழைக்காலம்
வந்து போகிறது..
..............................................................
சிலுசிலுவென
தூறல் பொழிய ..
தூரத்தில் எங்கோ
இரு புள்ளிகள் தெரிய..
அட.. அது நீயும்
நானுமாய் இருக்க..
கண்மணியே..
மழையோடு மழையாய்
உன் அணைப்பில் கரைய மாட்டேனா..
.................................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Nov 20, 2008

வார்த்தைச் சிதறல்கள்..

எந்தக் குழந்தையிடம்
கற்றுக்கொண்டாய்..
இப்படி வார்த்தைகளால்
சதிராட..
என் செவியெல்லாம்
நிறைகிறது..
........................................
உன் இதழ்கள்
தேனாய் இருக்குமோ..
உன் வார்த்தை சர்க்கரை
ஆகிறதே..
...........................................
மௌனம் அழகானதுதான்
என்றாலும்
உன் சின்ன 'சீ போடா' வை
நினைக்க அழகற்றதாகி
விடுகிறது மௌனம்..
..........................................
குயில் பாடல்
போலெல்லாம்
உன் வார்த்தைகள் இல்லை..
என்றாலும் உன் வார்த்தைகளை
கேட்டுத்தான் குயில்
நன்றாக பாட
கற்றுக்கொண்டிருக்க வேண்டுமென
நினைக்கிறேன் நான்..
.....................................................
எங்கே கற்றுக்கொண்டாய்..
இப்படி வார்த்தைகளால்
மழை தூவ..
என் இதயமெல்லாம்
நனைகிறதடி..
.....................................................
'ம்' என்பது
ஒற்றை எழுத்து
என்றாலும்
எனக்கு அது
கவிதைதான்..
நீ
சொல்வதால்..
..............................................
கடைகளில்
மதுவிற்கு பதில்
உன் வார்த்தைகளை
விற்கலாம்..
...........................................
உலகின் எட்டாவது
அதிசயமாய் இருக்குமோ
உன் வார்த்தைகள்..
பகலிலும் பனி தூவுகிறது..
.................................................
கனவில் எல்லாம்
இனி என்னோடு
பேசாதே நீ..
உன் மற்ற கனவுகள்
கனவுகள் எல்லாம்
காத்திருந்து பார்த்துவிட்டு
அதிகாலையில்
சண்டைக்கு
வருகின்றன என்னிடம்..
..........................................................
என் வீட்டு
தோட்டத்தில்
ரோஜாக்களோடு ரோஜாவாய்
உன் வார்த்தைகளையும்
வளர்க்க ஆசை எனக்கு..
................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன். .

Nov 19, 2008

நம்பிக்கை..

இன்றைக்காவது அவள் கூந்தல்
சேர்ப்பாயா..
நம்பிக்கையோடு தினம் தினம்
பூத்துதிரும் என் தோட்டத்து
ரோஜாக்களை போல்தான்
என் காதலும் காத்திருக்கிறது..
என்றேனும்
என் பக்கத்தில் வருவாய்..
வந்தெனை
ஒரு முத்தத்தில் கொல்வாய்
என்ற நம்பிக்கையோடு..

ஒரு நாள்..

இயல்பாய் நடப்பதென்றாலும்
யாரும் அறிவதே இல்லை..
பூப்பறிக்கும்போது காம்பின் வலியை..
அப்படித்தான் நம் பிரிவும்..
உன் உயிராய் வாழ்ந்த காலங்கள்
இன்னும் பசுமையாய் என் நெஞ்சில்..
இப்போதும் உன் நினைவுகளால்தான்
வாழ்கிறது மனது..
உதிர்ந்த மலரின் கலையாத வாசம் போல..
உடைந்த இதயத்தின் கரையாத நேசங்களோடு..
இருக்கும் ஒன்றோ.. இல்லாத ஒன்றோ..
தேடி தேடி தொலையும் மனிதர்கள்..
உன் காதலும் அப்படித்தான்
தேடிக்கொண்டு இருக்குமோ..
நிஜமான என்னை தொலைத்து விட்டு
நிழலான என் நினைவுகளில் மூழ்கி..
ஒரு நாள்..
ஒரே ஒரு நாள்..
உனக்காக மட்டும் வாழ்ந்து பார்..
ஒரு குழந்தையாகி என் மடி சாய்ந்திருப்பாய்..
எல்லாவற்றையும் மறந்து.
............................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

கண்மணிக்கு..

உன் காதலை எல்லாம்
ஒன்று சேர்த்து
ஒரே ஒரு முத்தமாய்
எனக்கு கடன் கொடு..
என் காலம் உள்ள காலம் வரை
உனக்கு திருப்பி செலுத்திகொண்டே
இருக்கிறேன் நான்..

கண்மணிக்கு..

உலகத்தில் உள்ள
பூக்களை எல்லாம்
உன் காலடியில் கொட்டி விட
ஆசை எனக்கு..
ஆனாலும் ஒரு பூவை கூட
பறிப்பதற்கான மனம்
இல்லை என்னிடம்..