Mar 31, 2011

தனிமை நிழல்..

தனிமையின் நிழல்
தாகம் தீர்க்கிறது..
உன் நினைவுகளால்
காய்ந்த இதயத்தை
உன் நினைவுகளை கொண்டே.
*********************************

எந்த பூக்களுமே
இயல்புகள் அற்று அறியாமல்
பூப்பதில்லை..
ஆசைகளை தவிர.
***************************

கொன்றாலும் அழியாதவை
உன் நினைவுகள் என்றேன்.
மெல்ல மெல்ல கொன்று
பரிசோதித்து
பார்த்துகொண்டிருக்கின்றன
உன் நினைவுகளே.
**********************************

ஏமாறுவது நம் தவறுமல்ல..
ஏமாற்றுவது அவர்கள் தவறுமல்ல..
யாசகனாய் இருத்தல் தவறென்கிறேன்.
****************************

எல்லாம் அறிந்தும்
சிதறடிக்கிறாய் மனதை.
தட்டுத்தடுமாறி கண்டெடுத்து
ஒன்றென சேர்க்க
மீண்டும் உன்னிடமே வந்து
காதல் என்கிறது.
*******************************


கரைந்த நேரங்களை
கண்களில் தேக்கி
நிகழ்காலத்தை
தொலைத்துகொண்டிருக்கும்
இயல்புகள் இழந்த மனசு.
*************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 26, 2011

எங்கிருக்கிறாய் நீ..


காய்ந்து போன முற்றத்தை
ஈரமாய் அணைத்துக்கொள்ளும்
நிலவின் ஒளியாய்..
உன் நினைவுகள்.
*****************************


ஏதும் அறியாதவையாய்
எப்போதும் போல கேட்கின்றன
என் தோட்டத்து பூக்கள்..
எங்கே உன் அன்பென்று?
தவமின்றி கிடைத்த
வரங்கள் யாவும்
நிலைப்பதில்லையென்று
சொன்னால் புரியுமா அவைகளுக்கு.
***********************************


கவிதைகள் விற்பனைக்கு..
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோ
அசரடிக்கும் கவிதைகளிலோ
வாழ்வதில்லை காதல்.
**********************************


மனதறிந்து பேசுபவரிடம்கூட
மனதோடு தோன்றுவதை
பேசிவிடாதே..
மிகசிலரால் மட்டுமே
புரிந்துகொள்ள முடிகிறது.
பலரால் பிரிந்து செல்லதான்
முடிகிறது மிக எளிதாக.
*********************************


தேசம் இழந்த அகதியாய்
அலைந்து கொண்டிருக்கிறது
மனசு..
எங்கிருக்கிறாய் நீ.
*********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 23, 2011

கருவறுந்த இதயங்கள்

மறுக்கப்பட்ட போதும்
மறக்க நினைப்பதில்லை ஒருபோதும்..
கருவறுந்த இதயங்கள்.
****************************

வழியில்லா இடத்தில்
வருகையை எதிர்பார்ப்பது போல
மனசில்லா இடத்தில்
மயக்கங்களை எதிர்பார்த்தவனாகினேன்..
ஏற்றுகொள்ள மறுக்கும் மனசு
ஊமையாய் அழுது அடம்பிடிக்கிறது.
பாரங்கள் கரையாது என தெரிந்தும்.
***********************************

சமயங்களில் இறப்புகள் கூட
இயல்பாய் இருக்கின்றன..
இழப்புகள் இருப்பதில்லை ஒருபோதும்..
காணும் காட்சிகளும்
கிடைக்கும் தனிமைகளும்
கரையும் இரவுகளும்
விடியும் பொழுதுகளும்
முட்களென தாங்கி நிற்கின்றன.
உன் நினைவுகளை.
********************************

பறிக்கப்படுவதே சோகம் எனும்போது
அந்த பூக்கள் பூஜைக்கு போனாலென்ன..
கல்லறைக்கு போனாலென்ன..
உணர்விழந்த வாழ்க்கையும்
பறிக்கப்படும் பூக்களும்
ஒன்றென்றுதான் தோன்றுகிறது.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 16, 2011

அழகு பிசாசு.

நீ வரும்வரை
தடுமாறிக்கொண்டிருக்கும் என் நேரங்கள்..
நீ வந்தவுடன் இறக்கை கட்டி
பறக்கின்றன..
அப்படி என்னதான் மந்திரம் வைத்திருக்கிறாய்?
**************************************
அழகென்ற சொல்லுக்கு
எதிலெதிலோ விளக்கம் கிடைத்தது.
பேரழகு என்பதோ உன்னை
பார்த்த பின்புதான் விளங்கியது.
அழகு பிசாசே..
உன்னை ரசிக்க இன்னும் எத்தனை
காலங்கள் வேண்டுமானாலும்
வரமாய் வாங்கலாமடி.
**************************************
சாலையோரம் என் கை பிடித்து
நடக்கையில் வேறு எதையும் நீ
தொடுவதே இல்லையாம்.
உதிரும் பூக்கள் என்னிடம்
சண்டைக்கு வருகின்றன.
தெரியுமா அவைகளுக்கு..
உன் கைபிடித்து நடக்கவே
என் நேரங்களை நான் பார்த்து பார்த்து
செய்துகொள்வது.
***************************************
எப்போதுமில்லாத அதிசயமாய் நீ
முத்தப்பந்தயத்திற்கு
ஒப்புக்கொள்ளும்போதே
நான் யோசித்திருக்க வேண்டும்..
அம்மாடீ.. கேட்பவர்களுக்கு
இனி என்ன பதில் சொல்ல நான்?
************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 5, 2011

அட..கிராதகிகளா..

பெரும்பாலும் பெண்கள் அழுதால்
பேய் மாதிரி இருக்குமாம்..
நீயும் அப்படிதான் இருப்பாய் என
நினைத்திருந்தேன்.
முதன்முதலாய் எனக்காய் நீ
அழுததை பார்க்கும்வரை.
*****************************
“சுச்சூ... அம்முகுட்டி..”
நீ பக்கத்து வீட்டு குழந்தையை
கொஞ்சி கொண்டிருக்கும்போது
“குழந்தையோடு என்ன விளையாட்டு..
வா சாப்பிடுவாய்” என அழைத்த
உன் பாட்டிக்கு தெரியுமா?
இனம் இனத்தோடுதான் சேருமென்று.
********************************
“ஹாய்..”
“ஹாய்..”
“இப்போதான் வந்தியா?”
“ம்ம்.. நீ ஏன் லேட்டு?”
“கொஞ்சம் வேலை.. அதான் லேட்டு”
“இல்ல.. என்னமோ இருக்கு”
“அதான் சொல்றமுல்ல.. வேலைனு..”
“நா நம்ப மாட்டேன்.. நீ சொல்லு”
”என்ன சொல்ல?”
“ஏன் லேட்டுனு சொல்லு”
“அதான் வந்துடேன்ல.. விடு அதை..”
“அப்டீல்லாம் விட முடியாது..
சொல்லிதான் ஆகணும்..”
“நீ இப்டீல்லாம் சொன்னா கேக்க மாட்ட..
இப்போ சொல்றேன் பாரு..”
“சொல்லு..சொல்ல்ல்ல்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....”
உன் கண்ணாடி வளையல்கள்
வெட்கபட்டு கூச்சலிட..
நம் காதல் மெல்லமாய் இறக்கை கட்டியது.
எல்லாம் முடிந்து கடைசியில்
பெருமூச்சுடன் முனகினாய்..
”இத மொதல்லயே பண்ணிருக்கலாம்..
தேவையில்லாம வம்பு சண்டை போட்டு..
ஹம்ம்ம்.. சரியான டியூப்லைட்டு..”
அட..கிராதகிகளா...
***********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.