Mar 21, 2014

பேரன்பே..!











சின்ன சின்னதாய்தான்
ஆரம்பித்தது எல்லாமும்.
பள்ளிக்கு செல்லும்போதே
மாமா வந்தால்தான்
வருவேன் என்பாய்.
ஒற்றை கடலை
மிட்டாயை கூட
மாமாவிற்கு பாதி என்று
எடுத்து வைப்பாய்.

சின்ன சின்னதாய்
உண்டியலில் நீ சேர்க்கும்
பணமெல்லாம்
என் தேவைகளாய் செலவழியும்.

வார்தைகளில் ஒரு
மழை நாளை கண்முன்
நிறுத்துவாய்..
சிணுங்கல்களில்
இதுவரை கேட்டறியா
மெல்லிசையை
உணரவைப்பாய்.

முதன் முதலாக
சேலை கட்டிய போது
ஓடி வந்து
நல்லாருக்கா என
கேட்டுகொண்டிருந்தது
இன்னும் என் செவிகளில்..

உனக்கென்று எதுவும்
கேட்டறியாதவள் நீ
எனக்கென்றுதான்
பார்த்து பார்த்து
அத்தனையும் செய்ய 
கற்றுக்கொண்டிருந்தாய்.

விடிகாலைப் பொழுது
தூறலிடும் மழை நாள்
மஞ்சள் வெயிலின் 
மாலைப்பொழுது
வெண்ணிலவின் 
பெளர்ணமி காலம் என
அத்தனை அழகான நாட்களும்
‘என்னை பிடித்திருக்கா’ எனும்
உன் கேள்வியில்லாமல் 
கடந்ததே
இல்லை எனக்கு.

என்னை பிடித்திருக்கா என்
ஆயிரம் முறை கேட்ட நீ
ஒருமுறகூட உன்னை பிடிக்கும்
என சொன்னதே இல்லை என்னிடம்.
மாறாக உன் வருகைகளும்
உன் செய்கைகளுமே உணர்த்திவிடும்.


பேரன்பின் பிம்பங்களாய்
சிரித்தாய் ரசித்தாய்
கொஞ்சினாய் இன்னும்
என்னவெல்லமோ செய்தாய்

உன் வார்த்தைகளாய்
உன் சிணுங்கல்களாய்
உன் கோபங்களாய்
உன் கெஞ்சல்களாய்
உன் பிம்பங்களாய்
என் அறையெங்கும் சிதறி கிடக்கிறது.
உன் காதலும் ப்ரியங்களும்.

பேரன்பாய் தொடங்கி
பேரன்பாய் முடியும்
எல்லா காதலும் போலவே
நம் காதலும்..
இதோ பிரிந்த இதயங்களின்
வரிசையில் நம் இதயமும்.

இப்போதெல்லாம்
எப்போதும் அதிகம்
பேசிக்கொண்டிருந்தவள்
எதிர் வரும் ஏதேனும்
ஒரு நேரத்தில் கூட
மெளனமாய் ஒரு பார்வை.
அதிகம் பேசியறியாத நானோ
மனதோடு அரற்றிக்கொண்டு.


உன்னால்தான்
காதாலாய் காதலாகி
காதலால் வாழ்ந்துகொண்டிருக்கிறது
என் உலகம்.
ஆனால் நீயில்லாத எதுவும் 

முழுமையாகவில்லை எனக்கு.
*************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.