Jul 28, 2011

அன்பே.. அன்பே..

என்னதான்
துரத்தியடித்தாலும்

அவ்வப்போது

விழியோரமாய்

மழை ஈரமாய்

நனைய வைத்து விடுகிறது

உன் நினைவுகளாய்.

தனிமை.
------------------------------
மிக மிக அழகாக

அல்லது ஆழமாக

பிறந்திருந்தாலும்

சட்டென்று கசக்கி எறிய

தெரிந்திருக்கிறது

எல்லா பெண்களுக்கும்.

பூக்களையும்

பூக்களை போன்ற மனதையும்.
---------------------------------
உன் வீட்டு ஜன்னலோர

உன் தனிமையில்

கம்பியில் பட்டு

முகத்தில் தெறிக்கும்

மழை துளியின்

ஈரமாகவோ
அல்லது ஜன்னலோர

பேருந்து பயணத்தின்

பின்னோக்கி செல்லும்

நினைவுகளாகவோ

கவிதை சொல்லிக்கொண்டு

உன்னையே சுற்றிகொண்டிருக்கும்

என் ப்ரியங்கள்.

தூறலாய் பொழியும்

ஒரு மழை நாளில்

கண்ணில் சாரலாய்

வழியும் சபிக்கப்பட்ட

நிமிடங்களில்

இது போதுமென

ஏகாந்தமாய் சாய்ந்திருக்கும்

வேளைகளில்

அல்லது கண்மூடி

மனம் நிறைந்து

ரசித்துக்கொண்டிருக்கும்

ஒரு பாடலின் வரிகளில்

என ஏதோ ஒன்றில்

உன் ஞாபக சிதறல்களில்

மெல்ல தட்டுபடலாம்

என் ப்ரியங்கள்.

நிச்சயமாக அவ்வேளையில்

கண்ணில் நீராக அல்ல

உன் இதழில் புன்னகையாக

வாழும் என் ப்ரியங்கள்.

ப்ரியமுடன்

லோகநாதன்.

Jul 19, 2011

மனசறிந்த பூக்கள்..

பூக்களற்ற செடிகளை
தாங்கி நிற்கும் வேர்களாய்
ஆசைகளற்ற உன் நினைவுகளை
தாங்கி நிற்கும் இதயம்.
---------------------------------------
கவனிப்பாரற்று வேர்கள்
காய்ந்தே கிடந்தாலும்
சந்தோஷமாய் மலரும்
மனசறிந்த பூக்கள்.
----------------------------------
அன்பை கொல்லும் ஆயுதம்
உண்டோ என கேட்டேன்..
உள்ளதே என மெளனமாய்
சொல்லாமல் சொல்கிறாய்.
-----------------------------------
நிஜங்களாய் தேய்ந்து
நினைவுகளாய் வளர்ந்து
கண்ணீராய் கரைந்து
கொண்டிருக்கிறாய் என
தெரிய வாய்ப்புகள் இல்லைதான்.
இன்னமும் உன் நலம்
கேட்டுக்கொண்டே இருக்கும்
என் வீட்டு கண்ணாடிக்கும்..
என் தோட்டத்து பூக்களுக்கும்.
--------------------------------------
உன்னருகே இருக்கும்
நேரங்களில் ஒருபோதும்
மதித்ததே இல்லை என்றாலும்
காலம் எனக்கு மிகசிறந்த
பரிசுகளை செய்து கொடுத்திருக்கிறது.
உன் நினைவென்னும் பெயரில்.
----------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.