Apr 16, 2011

மனசு..

காட்சிகள் வர்ணம் தொலைத்து விட்டன.
வார்த்தைகள் ஜீவன் இழந்து விட்டன.
நேரங்களின் சிறகு முறிந்து விட்டது.
இன்னும் உன்னை தேடி தேடி
அலைந்து கொண்டுதானிருக்கிறது
மனசு.
****************************

தீராத ஆசைகளையும்
கரையாத நேசங்ளையும்
புதைக்க தெரிந்தவன்
நல்ல மனிதனாகிறான்.
தெரியாதவன் பைத்தியமாகிறான்.
*******************************

காற்றின் திசையில்
பறக்கும் பட்டமாய்
மனசின் திசையில்
வாழ்க்கை.
விருப்பங்களற்று.
*********************************

கருவோடு சுமந்ததை போலல்ல..
தெருவோடு காண்பதெல்லாம்
சில புன்னகைகளும்..
கொஞ்சமாய் நலம் விசாரிப்புகளும்
போதுமல்லவா?.
*****************************

சிரித்தால் சிரிக்கிறது
முறைத்தால் முறைக்கிறது
அழுதால் அழுகிறது.
உன் போலில்லை
என் வீட்டு கண்ணாடி.
*****************************


Apr 5, 2011

பல்லாங்குழி..

கனவுகள் அவரவர்
சொந்த உரிமையாம்..
அவற்றைகூட திருடி கொள்ள
உன்னால் மட்டும்தான் முடிகிறதடி.
************************

”நல்லா சாப்ட்டு சீக்கிரம்
குண்டாகுனா கேக்கவே மாட்டியா நீ?”
“ஏன்.. நா குண்டானா உனக்கென்ன?”
“ஹி..ஹி.. குண்டானா இடுப்புல
ஏதோ மடிப்பு விழுமாம்ல..
அங்கதான் வீடு கட்டி
குடித்தனம் பண்ணுவேன்னு
அடம் புடிக்குது மனசு..”
“அய்..அஸ்கு.. புஸ்கு.. ஆசைய பாரு”
பழிப்பு காட்டியதில்
பல்லாங்குழி ஆடுதடி அதே மனசு.
***************************

இனிமேல் சேலையெல்லாம்
கட்டவே கட்டாதே..
உன் எல்லா அழகையும்
தானே திருடி வைத்து கொள்(ல்)கிறது
கர்வம் பிடித்த சேலை.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 31, 2011

தனிமை நிழல்..

தனிமையின் நிழல்
தாகம் தீர்க்கிறது..
உன் நினைவுகளால்
காய்ந்த இதயத்தை
உன் நினைவுகளை கொண்டே.
*********************************

எந்த பூக்களுமே
இயல்புகள் அற்று அறியாமல்
பூப்பதில்லை..
ஆசைகளை தவிர.
***************************

கொன்றாலும் அழியாதவை
உன் நினைவுகள் என்றேன்.
மெல்ல மெல்ல கொன்று
பரிசோதித்து
பார்த்துகொண்டிருக்கின்றன
உன் நினைவுகளே.
**********************************

ஏமாறுவது நம் தவறுமல்ல..
ஏமாற்றுவது அவர்கள் தவறுமல்ல..
யாசகனாய் இருத்தல் தவறென்கிறேன்.
****************************

எல்லாம் அறிந்தும்
சிதறடிக்கிறாய் மனதை.
தட்டுத்தடுமாறி கண்டெடுத்து
ஒன்றென சேர்க்க
மீண்டும் உன்னிடமே வந்து
காதல் என்கிறது.
*******************************


கரைந்த நேரங்களை
கண்களில் தேக்கி
நிகழ்காலத்தை
தொலைத்துகொண்டிருக்கும்
இயல்புகள் இழந்த மனசு.
*************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 26, 2011

எங்கிருக்கிறாய் நீ..


காய்ந்து போன முற்றத்தை
ஈரமாய் அணைத்துக்கொள்ளும்
நிலவின் ஒளியாய்..
உன் நினைவுகள்.
*****************************


ஏதும் அறியாதவையாய்
எப்போதும் போல கேட்கின்றன
என் தோட்டத்து பூக்கள்..
எங்கே உன் அன்பென்று?
தவமின்றி கிடைத்த
வரங்கள் யாவும்
நிலைப்பதில்லையென்று
சொன்னால் புரியுமா அவைகளுக்கு.
***********************************


கவிதைகள் விற்பனைக்கு..
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோ
அசரடிக்கும் கவிதைகளிலோ
வாழ்வதில்லை காதல்.
**********************************


மனதறிந்து பேசுபவரிடம்கூட
மனதோடு தோன்றுவதை
பேசிவிடாதே..
மிகசிலரால் மட்டுமே
புரிந்துகொள்ள முடிகிறது.
பலரால் பிரிந்து செல்லதான்
முடிகிறது மிக எளிதாக.
*********************************


தேசம் இழந்த அகதியாய்
அலைந்து கொண்டிருக்கிறது
மனசு..
எங்கிருக்கிறாய் நீ.
*********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 23, 2011

கருவறுந்த இதயங்கள்

மறுக்கப்பட்ட போதும்
மறக்க நினைப்பதில்லை ஒருபோதும்..
கருவறுந்த இதயங்கள்.
****************************

வழியில்லா இடத்தில்
வருகையை எதிர்பார்ப்பது போல
மனசில்லா இடத்தில்
மயக்கங்களை எதிர்பார்த்தவனாகினேன்..
ஏற்றுகொள்ள மறுக்கும் மனசு
ஊமையாய் அழுது அடம்பிடிக்கிறது.
பாரங்கள் கரையாது என தெரிந்தும்.
***********************************

சமயங்களில் இறப்புகள் கூட
இயல்பாய் இருக்கின்றன..
இழப்புகள் இருப்பதில்லை ஒருபோதும்..
காணும் காட்சிகளும்
கிடைக்கும் தனிமைகளும்
கரையும் இரவுகளும்
விடியும் பொழுதுகளும்
முட்களென தாங்கி நிற்கின்றன.
உன் நினைவுகளை.
********************************

பறிக்கப்படுவதே சோகம் எனும்போது
அந்த பூக்கள் பூஜைக்கு போனாலென்ன..
கல்லறைக்கு போனாலென்ன..
உணர்விழந்த வாழ்க்கையும்
பறிக்கப்படும் பூக்களும்
ஒன்றென்றுதான் தோன்றுகிறது.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 16, 2011

அழகு பிசாசு.

நீ வரும்வரை
தடுமாறிக்கொண்டிருக்கும் என் நேரங்கள்..
நீ வந்தவுடன் இறக்கை கட்டி
பறக்கின்றன..
அப்படி என்னதான் மந்திரம் வைத்திருக்கிறாய்?
**************************************
அழகென்ற சொல்லுக்கு
எதிலெதிலோ விளக்கம் கிடைத்தது.
பேரழகு என்பதோ உன்னை
பார்த்த பின்புதான் விளங்கியது.
அழகு பிசாசே..
உன்னை ரசிக்க இன்னும் எத்தனை
காலங்கள் வேண்டுமானாலும்
வரமாய் வாங்கலாமடி.
**************************************
சாலையோரம் என் கை பிடித்து
நடக்கையில் வேறு எதையும் நீ
தொடுவதே இல்லையாம்.
உதிரும் பூக்கள் என்னிடம்
சண்டைக்கு வருகின்றன.
தெரியுமா அவைகளுக்கு..
உன் கைபிடித்து நடக்கவே
என் நேரங்களை நான் பார்த்து பார்த்து
செய்துகொள்வது.
***************************************
எப்போதுமில்லாத அதிசயமாய் நீ
முத்தப்பந்தயத்திற்கு
ஒப்புக்கொள்ளும்போதே
நான் யோசித்திருக்க வேண்டும்..
அம்மாடீ.. கேட்பவர்களுக்கு
இனி என்ன பதில் சொல்ல நான்?
************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 5, 2011

அட..கிராதகிகளா..

பெரும்பாலும் பெண்கள் அழுதால்
பேய் மாதிரி இருக்குமாம்..
நீயும் அப்படிதான் இருப்பாய் என
நினைத்திருந்தேன்.
முதன்முதலாய் எனக்காய் நீ
அழுததை பார்க்கும்வரை.
*****************************
“சுச்சூ... அம்முகுட்டி..”
நீ பக்கத்து வீட்டு குழந்தையை
கொஞ்சி கொண்டிருக்கும்போது
“குழந்தையோடு என்ன விளையாட்டு..
வா சாப்பிடுவாய்” என அழைத்த
உன் பாட்டிக்கு தெரியுமா?
இனம் இனத்தோடுதான் சேருமென்று.
********************************
“ஹாய்..”
“ஹாய்..”
“இப்போதான் வந்தியா?”
“ம்ம்.. நீ ஏன் லேட்டு?”
“கொஞ்சம் வேலை.. அதான் லேட்டு”
“இல்ல.. என்னமோ இருக்கு”
“அதான் சொல்றமுல்ல.. வேலைனு..”
“நா நம்ப மாட்டேன்.. நீ சொல்லு”
”என்ன சொல்ல?”
“ஏன் லேட்டுனு சொல்லு”
“அதான் வந்துடேன்ல.. விடு அதை..”
“அப்டீல்லாம் விட முடியாது..
சொல்லிதான் ஆகணும்..”
“நீ இப்டீல்லாம் சொன்னா கேக்க மாட்ட..
இப்போ சொல்றேன் பாரு..”
“சொல்லு..சொல்ல்ல்ல்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....”
உன் கண்ணாடி வளையல்கள்
வெட்கபட்டு கூச்சலிட..
நம் காதல் மெல்லமாய் இறக்கை கட்டியது.
எல்லாம் முடிந்து கடைசியில்
பெருமூச்சுடன் முனகினாய்..
”இத மொதல்லயே பண்ணிருக்கலாம்..
தேவையில்லாம வம்பு சண்டை போட்டு..
ஹம்ம்ம்.. சரியான டியூப்லைட்டு..”
அட..கிராதகிகளா...
***********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 22, 2011

சுகம்தாங்கி கற்கள்.

எப்போது முத்தம் கேட்டாலும்
முறைத்துக்கொண்டே
திரும்பி நின்று கொ(ல்)ள்கிறாயே..
தெரியுமாடி உனக்கு..
பின்னங்கழுத்தில் முத்தமிட கூடாதென்று
காதலில் எந்த விதியும் இல்லையென.
***************************************
எப்போதும் சுமைகளையே
தாங்கும் சுமைதாங்கி கற்கள்
நீ அமரும்போது மட்டும்
சுகம்தாங்கி கற்களாகின்றன.
*************************************
நிலவை காட்டினால்தான்
சாப்பிடுவேன் என அடம்பிடித்த
குழந்தை எதிரில் வந்த
உன்னை பார்த்ததும்
சிரித்துக்கொண்டே சாப்பிட
தொடங்குகிறது.
***************************************
வெறுமனே என்னை பார்த்து
புன்னகைத்து சென்றால்
துள்ளி குதித்து கும்மாளமிடுகிறது
இந்த மனசு.
இனிமேல் கூடவே ஒரு
முத்தமும் வைத்துவிட்டு போ..
மூர்ச்சையாகி கிடக்கட்டும்.
***************************************
அது எப்படி..
நீ ஏறிய பின்பு
பேருந்து
பேரழகுந்தாகிறது.
*****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

மடி சாயும் வரம்..

உன் கைவளைகள் சொல்லவில்லையா
மனதோடு என் பெயரை..
தினம் கண்மூடும் நேரங்கள் சொல்லவில்லையா
கனவோடு என் நேசங்களை..
அஞ்சாறு நிலவுகள் சேர்த்தே அழகாக செய்தானம்மா
ஒரு நூறு மீனாட்சி பார்க்கின்றேன் உன் முகத்தில்.
நீ பொட்டு வைக்கும்போதெல்லாம்
சொல்லியிருக்குமே உன் வீட்டு கண்ணாடி
அது பொட்டல்ல என் உயிரென்று..
அள்ளி பூச்சூடும் போதெல்லாம்
சொல்லியிருக்குமே அதன் வாசங்கள்..
அது வாசமல்ல என் நேசம் என்று..
தங்க மீன் செய்து வளர்த்தாலும்
அது மிரட்டும் முட்ட கண்ணை போலாகுமா?
வெள்ளி மலரொன்றை பரிசாக பெற்றாலும்
அது ரசிக்கும் உன் புன்னகை போலாகுமா?
வரங்கள் அள்ளி கொடுத்தாலும் வேண்டாமேன்பேன்
உன் மடி சாயும் நிமிடங்கள் போதுமேன்பேன்.
**********************************************
ப்ரியமுடன்
லோகநாதன்.

Feb 16, 2011

நினைவெனும் மந்திரங்கள்.

நட்போ.. காதலோ..
பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
.
வேரூன்றாமல் வளர்ந்து
நீரூற்றாமல் பூக்கும்
பூக்களவை.
.
சமயங்களில்
உற்சாக பேரூற்றாய்
உயிரோடு பொங்கும்.
சந்தர்ப்பங்களில்
கொடிய விஷமாய்
மனதோடு ஏங்கும்.
.
வேண்டாம் என்று
தள்ளி வைத்தாலும்
சுயங்கள் திருடும் கலையை
இயல்பாய் கற்று வைத்திருக்கின்றன.
.
எதிர்வரும் இயல்பான
முகத்திலோ அல்லது
எதிர்பாரா ஒரு சில
செயல்களிலோ சட்டென்று
ஒட்டிக்கொ(ல்)ள்ளும்.
.
நட்போ.. காதலோ..
பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
நினைவென்னும் மந்திரங்களை.
*******************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

மனமுதிரும் காலம்.

கொஞ்சம் கூட
உறுத்தவே இல்லை.
இலையுதிர்கால மரங்கள்.
.
.
துணை.
***********************************************
பூஜைக்கு போவேனா மாட்டேனா
கேட்டுவிட்டு பூப்பதில்லை.
.
.
கல்லறை பூக்கள்.
**************************************
ரசிக்க எத்தனையோ உள்ளன.
ரசிக்கும் மனம்தான் கேள்வியாகிறது.
.
.
பிரிவுகள்.
******************************
பறக்க ஆசைப்படும்
சிறகொடிந்த பறவையை போல்
தடுமாறுகின்றன
நமக்கான நேரங்கள்.
.
.
மனசின் வார்த்தைகளின்மை.
********************************
எப்போதும் வெறுப்புகளை
உமிழ்ந்தாலும்
தேவதையாக வாழ
தெரிந்திருக்கிறது.
.
.
காதலி.
**************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 13, 2011

பொருளற்ற கவிதைகள்..

என்னதான் அழகாய் இருந்தாலும்
ரசிக்கப்படாமல்
கிழித்தோ அல்லது கசக்கியோ
எறியப்படும் யாரோ ஒருவரால்..
பொருளற்ற கவிதைகள்.
ம்ம்.. கவிதையும் காதலும் வேறல்ல.
***************************************
கொஞ்சி கொஞ்சி
கரைதிருக்கலாம்தன்..
வெட்கம் என்றால்..
வெறுப்புகளை என்ன செய்ய?
**********************************
நீரை சுமக்கும் மேகங்கள்
பாரத்தை அவ்வப்போது
இறக்கி வைத்து கொள்கின்றன
மழையாய்..
உன் நினைவை சுமக்கும்
இதயம் என்ன செய்யும்..
கண்ணீரும் இல்லை என்னிடம்.
************************************
உன் வருகைகளுக்கான
அதீத எதிர்பார்புகள் இல்லாத நான்..
உன் வார்த்தைகளுக்கான
மயக்கம் இல்லாத நான்..
உன் சந்தோஷங்களுக்கான
தேடல் இல்லாத நான்..
நூலறுந்த பட்டத்தை
உற்று கவனிக்க தோன்றுகிறது எனக்கு .
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 11, 2011

கடைசியாய்..



"ஹாய்.."

"வந்துட்டியா.. வாடி குட்டி.."
"இந்த குட்டி பட்டிலாம் வேணாம்.."
"சரி விடு.. குளிச்சிட்டியா?"
"ஓ.. ஆச்சே.."
"அடடா..போச்சே.."
"என்ன போச்சு?"
"ம்ம்.. நான் இதுவரைக்கும்
பொம்மையை குளிப்பாட்டியதே இல்லையடி..
அதான் நீ குளிக்கலேன்னா குளிப்பாட்டி விடலாமேன்னு பார்த்தேன்.
சரி விடு.. சாப்டாச்சா?"
"ம்ம்.. ஆச்சே.. நீ?"
"அட.. அதும் போச்சா?"
"ஏன் பொம்மைக்கு ஊட்டி விட போறியாக்கும்?"
"அட லூசுபுள்ள.. பொம்மை சாப்ட்டு எங்காச்சும் பாத்திருக்கியா?"
"பின்ன?"
"ஹிஹி .. கொழந்தைங்களுக்கு நான் இதுவரை
ஊட்டி விட்டதே இல்லையடி.. அதான் கேட்டேன்."
"ஏய்.. இந்த மாதிரில்லாம் பேசாதே..
அப்புறம் நான் போய்டுவேன்.. "
"சரி.. சரி.. விடு.. மத்தியானம் தூங்குவியா?"
" அதெல்லாம் இல்ல .. ஏன் கேக்குற?"
"ம்ம்.. பூக்கள் என் மடி சாஞ்சு பார்த்ததே இல்லையடி..
அதான் நீ தூங்குனா.. உன்ன மடியில சாய்த்து ... "
"அடேய்... "


சட்டென்று கலைந்துவிட்டது.
விழியோரம் உணர்ந்த ஈரத்தால்.
முழுமையாக உன் நினைவுகளிலிருந்து
கலைந்து திரும்பலாமென நினைத்து
கடைசியாய் என் இருப்புகளை சரிபார்த்துகொண்டேன்.
காணவில்லை மனதை மட்டும்.
கடந்து சென்றதுதான் உன்னுடனான
இறுதி பயணம் என்பதை அறியாமல்
இன்னும் உன்னை கொஞ்சிகொண்டோ
அல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது.
********************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 31, 2011

அடி ஆத்தீ..

உன் நெனப்புல ஊஞ்சல் கட்டி
என் உசுரு ஆடுது புள்ள
உன் வெள்ளரி மனசுல மயங்கி
தலைசுத்தி போகுது மனசு கிறங்கி
அடியேய்.. உன் மடியில
சாஞ்சா மெல்ல
கொடியேய்.. என் உசுரு பறக்கும்
பறக்கும் பறக்கும் பறக்கும் புள்ள.

அந்த சக்கர வள்ளி கெழங்கா இனிக்குற..
நீ சொக்குற மல்லி பூவா மணக்குற..
பூப்பூக்கவில்லையடி ஆனா வாசம் வீசுது..
காத்தாடி இல்லையடி ஆனா மனசு பறக்குது..
செல்லமா மொழி பேசையில
மனசெல்லாம் கரையுதடி..
மெல்லமா விழி பார்க்கையில
உசுரெல்லாம் கரையுது
கரையுது கரையுது கரையுது ..
(அடி ஆத்தீ.. கரைஞ்சு போச்சுங்க..)
********************************************
ப்ரியமுடன்
லோகநாதன்.

Jan 27, 2011

முட்டகண்ணு முழியழகி

கவனிப்பதற்கு பதிலாக
சந்தேகம்தான் வருகிறது..
வானம் எப்போது வெள்ளை நிறமாகி
நிலவு எப்போது கருமை நிறம் ஆனதென்று.
அட முட்டகண்ணு முழியழகி
கோலிகுண்டு கண்ணை உருட்டி உருட்டி
பேசாதே இனி என்னிடம்.
***************************************
தொடாமலேயே சிணுங்கும்
வெட்கச் சிணுங்கியாக இருக்கிறாயே..
வெட்க்கப்படாமல் வா..
வெயில் படாத இடங்கள்
காதலுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
**************************************
மொழிகளை விட
மௌனங்கள்தான் காதலை
அழுத்தமாய் பதிய வைக்கும் என்றால்
நம்ப மறுக்கிறாய்.
கட்டியணைத்து ஒரு முத்தம்
தந்து பார் புரியும்.
***************************************
நாளைக்கு நான் ஊருக்கு போகணும்.
இன்னிக்கு டிக்கெட் புக் பண்ணனும் என்றாய்.
சட்டென்று கேட்க தோன்றியது எனக்கு.
பூக்கூடைக்கெல்லாம் டிக்கெட்
புக் பண்ணனுமா என்ன?
************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 22, 2011

அடி கிறுக்குபுள்ள..




கடலலையில் கால் நனைத்து சந்தோசமாய் விளையடிகொண்டிருந்தாய்..
அலைகளும் உன் கால் நனைக்கும் சந்தோசத்தில் துள்ளித்துள்ளி வந்துகொண்டிருந்தன கரைக்கு.
"ஏய்.. எனக்கொரு சந்தேகமடி.."
"என்ன?" விளையாடிகொண்டே கேட்டாய்.
" நீ மட்டும்தான் இப்டி கிறுக்கியாட்டம் இருக்கியா ..
இல்ல உங்க வீட்ல எல்லோரும் இப்டிதனா?"
"என்ன வம்புக்கு இழுக்காத .. கோவம் வரும்.."
"உண்மையத்தானே கேட்டேன்?"
"டேய்.. யார் கிறுக்கி? நீதாண்டா கிறுக்கு பையன்.."
"நான் கிறுக்கனா? சரி விடு..
எங்க ஊர்ல கிறுக்கு பசங்களெல்லாம்
என்ன பண்ணுவாங்க தெரியுமா?"
"என்ன பண்ணுவாங்களாம்?"
"அப்டியே கட்டிப்பு.."
சொல்லி முடிப்பதற்குள் தர ஆரம்பித்துவிட்டாய்.
முத்தங்கள் எனும் பெயரில் வரங்களை.
*********************************************



"சீய்.. போடா .. நீ ரொம்ப மோசம்.." என்கிறாய்.
அப்படி என்ன சொல்லிவிட்டேன் நான்?
சாயங்காலம் ஆகிவிட்டதென்றாய்.
நானோ இல்லை இல்லை உன் மடி சாயும் காலம்
ஆகிவிட்டதென்றேன்.
இதற்காகவா இந்த மோசக்காரன் பட்டம்?
ஹய்யோடி.. பொல்லாதவர்கள்... இந்த காதலிகள்.
**********************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 12, 2011

மனசு..









பிரிவுகள் சுகம்தானே
அதற்கேன் இப்படி வருத்தம்?
களையிழந்த காம்பிடம்
கேட்டதற்கு..
அவளில்லாத நீயும்
இப்படித்தானே இருந்தாய் என
திருப்பி கேட்கிறது.
...............................................................
உனக்கும் எனக்குமான
நேரங்களைஎல்லாம்
மிக கவனமாய் சேர்த்து
வைத்திருக்கிறது மனசு.
நமக்கான எதிர்காலமே
இனி இல்லை என
நீ உணர்த்தும்போதேல்லாம்
நம் இறந்தகாலங்களை
இறுகப் பற்றிக்கொள்ள
தவறியதேயில்லை ஒருபோதும்.
.............................................................
ஒருமுறை அழகாய்
பூத்து குலுங்கினால் போதும்
ஆயுள் வரை வாடாமல்
பார்த்துகொள்ளலாம்தான்.
எனக்கு வேர்களே இல்லை என்கிறாயே.
.........................................................................
விரும்பினாலும் விலகினாலும்
உன்னிடம் மட்டுமே வருவேனென
அடம்பிடித்து தொலைக்கிறது.
விரும்பி வரும்போதெல்லாம்
காயங்கள் மட்டுமே தருவாய்
என்பதை அறியாமல்.
..........................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 6, 2011

காதல்பேச்சு.


உன்னுடன் இருக்கும் நேரங்களிலெல்லாம்
சொல்பேச்சு கேளாமல் காதல் பேச்சு மட்டுமே
கேட்பேனென அடம் பிடிக்கின்றன
என் நேரங்களும் வார்த்தைகளும் மற்றவையும்.
அதற்காக என் காதலை சீண்டி பார்க்காதே
பிறகு உதடு வலிக்கிறதென சொன்னால்
நான் பொறுப்பாக முடியாது.
***********************************************
குட்டி கவிதைகளாகவோ அல்லது
கொஞ்சும் நினைவுகளாகவோ எப்படியும்
என்னுடன்தான் இருக்கப்போகிறாய் நீ..
பிறகு ஏன் இனிமேல் உன் முகத்திலே
முழிக்கவே மாட்டேனென அழிச்சாட்டியம்
செய்து போகிறாய்?
************************************************
"வர வர என்னை சீண்டுவதே உனக்கு
வேலையாக போய்விட்டது
இனிமேல் உன் பக்கமே வரமாட்டேன் பார்.. "
கொஞ்சலாய் வந்தது கோபமொழி.
"ஆமா.. ஆமா.. உன் வெட்கத்தை பார்த்தாலே
எதாச்சும் பண்ண தோணுது எனக்கு..
வரும்போதே அதை எங்காச்சும் விட்டுட்டு வந்துடு.
எனக்கும் வெட்கமில்லாத உன்னை பார்க்க
ஆசையாய் இருக்கிறது.." என்றேன் புன்னகைத்துக்கொண்டே.
"ம்க்கூம்.. ரொம்பதான் ஆசை.."
மறுபடியும் போர்த்திகொண்டாய் வெட்கத்தை.
புன்னகைகளில் கரையத்தொடங்கியது
வெட்கம் மெல்லமாய்.
********************************************************
என்றுமில்லாத அதிசயமாய்
என் தோட்டத்து செடிகளில் ஒன்று மட்டும்
அதிகமாக பூத்து குலுங்கியது.
என்னவென்று கேட்டுதொலைக்க
கர்வமாய் சொல்கிறது..
நேற்று நீ அந்த செடியில்தான் பூ பறித்து சென்றாயாம்.
*************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.