Sep 6, 2013

மழைக்கவிதை..!


’எங்கள் கல்லூரியில்
கவிதைப்போட்டி.
ஒரு மழைக்கவிதை
சொல்லேன்’ என்றாய்
ரொம்பநாளைக்குப்பிறகு.
‘மழையே ஒரு கவிதைதானே
அதற்கென்று தனியாக
ஒரு கவிதை எதற்கு' என்றேன்.
‘ஏய்ய்ய்.. விளையாடம சொல்லு’
சிணுங்கினாய்.
எனக்குள் அப்போதே மழை
வரத்தொடங்கியது.
‘சரி கேளேன்..
மழைக்கும்
உன் மனதிற்கும்
மழைக்கும் அப்படியொன்றும்
பெரிதாய் வித்தியாசமில்லை.
மழையின் ப்ரியம்
மண்ணை நனைக்கும்
உன் ப்ரியம் 
என் மனதை நனைக்கும்!
எப்படி இருக்கு?’ என்றேன்.
’ம்ம்ஹீம்ம்.. வேற சொல்லு..’
‘ம்ம்ம்.. இந்த மழைக்கும்
உன் வெட்கங்களுக்கும்
நேரம் காலமே தெரிவதில்லை..
இரண்டுமே அவ்வப்போது வந்து
நனைத்து சென்றுவிடுகின்றன
மனதை..!’
‘ப்ச்ச்… இதுவும் நல்லால்ல..’
‘சரி கேளேன்..
எப்போது வந்தாலும்
உன் நினைவை 
கூட்டிக்கொண்டுதான்
வருகிறது இந்த மழை.
போகும்போது மட்டும்
தனியே சென்றுவிடுகிறது
நானோ விட்டுவிட
மனசில்லாமல்
உன் நினைவில் 
நனைந்துகொண்டு..!’ என்றேன்.
‘சுமார்தான்.. வேற..’
‘வேற என்ன..
பேசாமல் மழை வரும்போது
நீ குடை பிடித்து நடந்து காட்டு..
அதுக்கு பேர்தான் மழைக்கவிதை..
முதல் பரிசும் உனக்குதான்..’

‘ அட லூசு..’
சிரித்துக்கொண்டே நனைய
வைத்தாய் வெட்கங்களில்..!
***************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Aug 31, 2013

காதல் சேர்த்து வைத்து..!


இத்தனை வயசாகியும்
இப்போதும் சின்னக்குழந்தையாய்
உண்டியலில் காசு போட்டு வைக்கும்
பழக்கம் உனக்கு.
ஏன் எனகேட்க
ஒருநாளைக்கு யாருக்கேனும்
உதவுமே என்பாய்.
உடனே மண்டியிட்டு
கத்தத்தோன்றும் எனக்கு.
நீ காசு சேர்த்து வைப்பதைப்போல்
நான் காதல் சேர்த்து வைத்திருக்கிறேனடி
உனக்கு மட்டுமே செலவழிக்க வேண்டுமென்று!
********************************
ப்ப்ரியமுடன்..
லோகநாதன்.

Aug 23, 2013

காதலூட்டும் அன்னப்பறவை..


ஒவ்வொரு
முறையும்
எனை கடந்து
சென்றபின்
நீ திரும்பி பார்க்கும்போது
கரைவதற்கென்றே
தனியாக ஒரு
இதயம் செய்து
வைத்திருக்கிறேன்.
தெரிந்திருக்குமாடி உனக்கு?
 *************************************

நீலக்கடலில்
சோலைக்குயில்
பாதம் நனைக்க
காணாத கற்பக
விருட்சம் கண்டதாய்
களிப்புற்று கடலலையும்
துள்ளி வரும்..!
என் மனதை போலவே


ஒரு மழை நாளோ
அல்லது
அலைபேசி பாடலோ
சட்டென்று தூவிச்செல்லும்
உன் நினைவை..!
ஆனால் இந்த தனிமை
மட்டும்தான்
உன் நினைவோடு
வாழ கற்றுக்கொடுத்திருக்கிறது!

பசியறிந்து
உணவூட்டும்
அம்மாவைப்போல்
மனசறிந்து
காதலூட்டி செல்பவள் நீ!
***********************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்..

Jul 17, 2013

புதைகுழி..



என்ன சொன்னாலும்
ஏனோதானோவென்று
ஒரு அவதானிப்பு!
என்ன கேட்டாலும்
ஏதுமில்லாமற்போல்
ஒரு ஏகாந்தம்..!
எத்தனை காதலை
கொட்டினாலும்
புரியாதாவென அவ்வப்போது
சண்டையிட்டதாய் ஞாபகம் .
பிரிதொரு மழை நாளில்
ஈரமாய் புன்னகைத்து
மழையோடு மழையாய்
பொழிந்தாய் ஒற்றைப்பார்வையை..
விருப்பா..
வெறுப்பா..
இயலாமையா..
களிப்பா..
ஏகாந்தமா..
எதுவும் புரியாமலேயே
புரிந்துகொண்டேன்.
உனக்கு புரியாமலில்லை..
புதைத்து வைத்திருக்கிறாய் என்று!
**************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்..

Jul 6, 2013

நிலவு நீ..!


விடாது கொட்டித்தீர்த்த பின்பும்
தூறிக்கொண்டிருக்கும் தூவானமாய்..

ஓயாமல் அழுதுமுடித்த பின்பும்
விசும்பிக்கொண்டிருக்கும் மனசு!
***************************************************


சந்தோஷம்..
புன்னகை..
கோபம்..கண்ணீர்..
வலி.. தாபம்..
பிரிவு..
இப்படி ஏதேனும்
ஒன்றை கொடுத்து
கொண்டே இரு.
உன்னிடமிருந்து
ஏதேனும் ஒன்று 
பெற்றுக்கொண்டே
இருக்கவேண்டும்

இந்த காதலுக்கு!
**************************************

‘இனி சொல்ல ஒன்னுமில்ல’
எனும் வார்த்தைக்குள்
உற்று கவனித்தால்
ஒருவேளை தெரியக்கூடும்..

கடலளவு ப்ரியங்கள்!
*******************************************

உன் முத்தங்களின்
ஞாபகம் தீண்டும்போதெல்லாம்
எனக்கு சிறுவயதில்
சாப்பிட்ட நிலாச்சோறு
ஞாபகம் வரும்.
பூமிக்கு நிலவு..

எனக்கு நீ!
********************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 14, 2012

ம்ம்ம்ம்முத்தம்..





ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 14, 2012

காதல்..

காதல்..
உணர்வை சுமக்கும்
அற்புத மந்திரம்.
உயிரை வருடும்
மந்திர வாக்கியம்.
காதல் உணர்வு.
உயிர் உண்டு..
உருவம் இல்லை.
காதல் குழந்தை.
அழுதால் அழும்..
சிரித்தால் சிரிக்கும்.
காதல் மழை.
ரசிப்பவருக்கு சாரல்.
வெறுப்பவருக்கு புயல்.
காதல் கவிதை.
சிலருக்கு மனதோடு..
சிலருக்கு இதழோடு.
குளிரும் சித்திரையாய்
குளிராத மார்கழியாய்
முரன்பாடானதுதான் காதல்
முற்றும் உணரும் வரை.
எத்தனை எத்தனை
இதயங்களில் வாழ்ந்திருக்கும்..
எத்தன எத்தனை
கரங்களில் தவழ்ந்திருக்கும்..
இன்றும் கறைபடியாத
முதல் மழைத்துளியாய் காதல்.
வாருங்கள்..
ஒருமுறையேனும் வாழ்ந்து
பார்ப்போம்.
காதலாகி.. காதலோடு..
****************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Oct 1, 2011

யேடி கள்ளச்சி..

”ஏண்டீ.. இந்த பொண்ணுங்களாம்
பூக்கள்னாலே
மயங்கிடுவாங்களாமே
நிஜமா?”
“ம்ம்... ஆமா..”
“ஏன் அப்படி?”
”அது அப்படிதான்..”
“ம்ம்..சரி விடு.. இனிமேல்
நீ கோவபட்டா நானும்
பூ வாங்கி குடுத்து சமாளிக்கிறேன்..”
“ஹா..ஹா..
அப்படி எத்தன நாளைக்கு சாமாளிப்ப?”
“அட.. அப்போ உன்ன பூந்தோட்டம்..
இல்ல..இல்ல.. பூக்காட்டில்
வீடு கட்டி குடி வச்சிடுவேனே..”
“ம்ம்.. அப்படியா?
அதுக்கும் அசரலேன்னா
என்ன பண்ணுவ?”
“விடு..விடு.. அதுகெல்லாம்
ஐயா கிட்ட ஐடியா இருக்குடி..”
“என்னடா அது சொல்லுடா..”
“அதெல்லா சொல்ல முடியாதுடி..”
“ சொல்லலேன்னா எனக்கு
கெட்ட கோவம் வரும்டா..”
“ஹா..ஹா.. இந்த மாதிரி கோவப்படுற
பொண்ணுங்களை சமாளிக்கதானே
அந்த நான்கெழுத்து மந்திர சொல்லை
கண்டுபுடிச்சு வச்சிருக்கோம் பசங்க..
நீ வேணும்னா இப்பவே
கோபப்பட்டு பாரேன்..
அடுத்த நிமிடமே
ச்ச்சீய்..போடா..உதடு வலிக்கிறதென்பாய்.”
********************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Aug 10, 2011

குட்டி..

இழப்புகளின் வலி
அறியாத காலம்
அதன் போக்கில்
சென்று கொண்டிருக்கிறது.
உன் நினைவுகளை
கட்டி வைக்க பெரும்பாடு
படுகிறேன் நான்.
******************************
சொல்லாதே குயிலே
எந்த பாடலும் என்னோடு..
என் சோகம் சொல்லவே
நாதியற்று கிடக்கிறேன்.
******************************
உணர்வுகள் என்று
பார்த்தால் என்னிடம்
ஒன்றும் இல்லயடி குட்டி..
உன் நினைவுகளை தவிர.
***************************
ஒவ்வொரு நாளும்
பொய்யாய் கழிந்து
கொண்டிருக்கிறது..
இன்றேனும் எனை
தேடி வருவாய் என்ற
நம்பிக்கையோடு.
**************************
காலுடைந்த மயிலை
போலல்ல..
கனவுடைந்த நெஞ்சம்.
கண்ணீரிலும் உன்னைதான்
நினைத்துகொண்டிருக்கிறதடி குட்டி.
*****************************
கூந்தல் இளைப்பாறும்
பூக்கள் அறிந்திருக்குமா?
கருகிப்போகும்
காம்பின் வலிகள்.
********************************
நானும் கவிதையும்
நலமாய் வாழ்ந்திருக்கலாம்தான்.
நாளும் உன் நினைவற்று
போயிருந்தால்.
***************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jul 28, 2011

அன்பே.. அன்பே..

என்னதான்
துரத்தியடித்தாலும்

அவ்வப்போது

விழியோரமாய்

மழை ஈரமாய்

நனைய வைத்து விடுகிறது

உன் நினைவுகளாய்.

தனிமை.
------------------------------
மிக மிக அழகாக

அல்லது ஆழமாக

பிறந்திருந்தாலும்

சட்டென்று கசக்கி எறிய

தெரிந்திருக்கிறது

எல்லா பெண்களுக்கும்.

பூக்களையும்

பூக்களை போன்ற மனதையும்.
---------------------------------
உன் வீட்டு ஜன்னலோர

உன் தனிமையில்

கம்பியில் பட்டு

முகத்தில் தெறிக்கும்

மழை துளியின்

ஈரமாகவோ
அல்லது ஜன்னலோர

பேருந்து பயணத்தின்

பின்னோக்கி செல்லும்

நினைவுகளாகவோ

கவிதை சொல்லிக்கொண்டு

உன்னையே சுற்றிகொண்டிருக்கும்

என் ப்ரியங்கள்.

தூறலாய் பொழியும்

ஒரு மழை நாளில்

கண்ணில் சாரலாய்

வழியும் சபிக்கப்பட்ட

நிமிடங்களில்

இது போதுமென

ஏகாந்தமாய் சாய்ந்திருக்கும்

வேளைகளில்

அல்லது கண்மூடி

மனம் நிறைந்து

ரசித்துக்கொண்டிருக்கும்

ஒரு பாடலின் வரிகளில்

என ஏதோ ஒன்றில்

உன் ஞாபக சிதறல்களில்

மெல்ல தட்டுபடலாம்

என் ப்ரியங்கள்.

நிச்சயமாக அவ்வேளையில்

கண்ணில் நீராக அல்ல

உன் இதழில் புன்னகையாக

வாழும் என் ப்ரியங்கள்.

ப்ரியமுடன்

லோகநாதன்.

Jul 19, 2011

மனசறிந்த பூக்கள்..

பூக்களற்ற செடிகளை
தாங்கி நிற்கும் வேர்களாய்
ஆசைகளற்ற உன் நினைவுகளை
தாங்கி நிற்கும் இதயம்.
---------------------------------------
கவனிப்பாரற்று வேர்கள்
காய்ந்தே கிடந்தாலும்
சந்தோஷமாய் மலரும்
மனசறிந்த பூக்கள்.
----------------------------------
அன்பை கொல்லும் ஆயுதம்
உண்டோ என கேட்டேன்..
உள்ளதே என மெளனமாய்
சொல்லாமல் சொல்கிறாய்.
-----------------------------------
நிஜங்களாய் தேய்ந்து
நினைவுகளாய் வளர்ந்து
கண்ணீராய் கரைந்து
கொண்டிருக்கிறாய் என
தெரிய வாய்ப்புகள் இல்லைதான்.
இன்னமும் உன் நலம்
கேட்டுக்கொண்டே இருக்கும்
என் வீட்டு கண்ணாடிக்கும்..
என் தோட்டத்து பூக்களுக்கும்.
--------------------------------------
உன்னருகே இருக்கும்
நேரங்களில் ஒருபோதும்
மதித்ததே இல்லை என்றாலும்
காலம் எனக்கு மிகசிறந்த
பரிசுகளை செய்து கொடுத்திருக்கிறது.
உன் நினைவென்னும் பெயரில்.
----------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jun 6, 2011

உயிரே..

நீ புன்னகைத்தாலே போதுமடி
என் இதயம் உன் சொந்தமாகும்.
ஒரு வார்த்தை பேசினாலே போதுமடி
என் நாட்கள் உன் சொந்தமாகும்.
நீ இஷ்டப்பட்டு கேளடி என் குட்டி
என் மூச்சு காத்தும் உன் சொந்தம்.
********************************
தெரியுமாடி உனக்கு?
அம்மாவும் அப்பாவும் சேர்ந்து
பிள்ளைகளை கொஞ்சுவதை போல
உன் நினைவுகளும்
என் நினைவுகளும் சேர்ந்து
கொஞ்சிக்கொண்டிருக்கின்றன..
உனக்காய் பிறந்த என் பிரியங்களை.
**********************************
காதலிடம் சாபம் பெற்றேன்
உன்னில் வாழும் வரையில்
மோட்சம் இல்லையென..
குட்டி தேவதையென
வந்து சேர்ந்தாய் இனிக்க இனிக்க
கதைகள் பேசி.
புத்தம் புது மலராய்
மனதை திறந்து
அன்பை சொல்லி ஆசை வைக்க ..
தயங்கி நடித்து வெறுத்து
மறைத்து மறைத்து
புதைத்து வைத்தாய்.
அடைமழை கூட இங்கே
அனலாகி கொதிக்குதடி..
ஒரு நொடி கூட என்னில்
யுகமாகி வதைக்குதடி.
உணர்ந்திடும் நாளொன்று
வந்து சேரும் எப்படியேனும்
அன்று இருப்பாய்
எந்தன் வாசல் முன்பே.
உலர்ந்து போன என் சம்பல் கூட
உன் புன்னகையை
தாங்கி நிற்கும் அவ்வேளை.
****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

May 24, 2011

தீராதது காதல்


இந்த பாடல் எனக்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று.

ப்ரியமுடன்..
லோகநாதன்.

May 17, 2011

வார்த்தைகள்..

பொருளற்று பிறந்திருந்தாலும்
மிக பொறுமையாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
என் வெளியெங்கும்
தீராத ஏக்கங்களோடு..

மணிக்கணக்கில்
பேசிய பின்பும்
போகும்போது இன்னும்
ஏதோ மீதமிருப்பதை
போல தோன்றும்..
இப்போதும் தோன்றுகிறது..
நம் உறவுகள் முடிந்துவிட்டன
என தெரிந்தும்..
இன்னும் கொஞ்சம்
அழுத்தமாகஅல்லது ஆழமாக
பேசியிருக்கலாம்தான்..

கொஞ்சம் சண்டையாக
நிறைய்ய கவிதையாக
மாற தெரிந்ததற்கு
முட்களாக மாற
தெரிந்திருந்ததில்
வியப்பேதும் இல்லை..


எதற்கும் கவனமாய் இரு.
ஒரு வேளை உன்னிடத்திலும்
சுயங்கள் திருட முயற்சிக்கலாம்..
உனக்கும் எனக்குமாய்
பிறந்து தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள்.
***********************************

Apr 19, 2011

திமிரும் திமிர்.

அழகாக இருந்தாலே
திமிரும் கொஞ்சம் கூட இருக்கும் போல..
உன் திமிரும் திமிரின் திமிரை
பார்த்ததிலிருந்து திமிர் பிடித்து
அலைகிறது மனசு.
******************************

எந்த பகையும் இல்லாமலே
எதிரியாகி போகிறேன்
உன் ஆடைகளுக்கு..
கட்டியணைக்கும்போது
குய்யோ முய்யோவென
கூச்சலிட்டு
கன்னாபின்னாவென
சாபமிடுகின்றன என்னை.
**********************************

உன்னை பார்த்ததுமே
முத்தமிட துடிக்கும் உதடுகளையும்
கட்டியணைக்க துடிக்கும் கைகளையும்
முறைத்தே அடக்கிவிடுகிறாய்.
ஆனால் தாறுமாறாக வந்து விழும்
வார்த்தைகளை என்ன செய்வாய் என கேட்க
அவற்றைத்தானே பத்திரமாய்
எடுத்து வைத்துக்கொள்கிறேன்..
தனிமையின் இனிமையான
துணையல்லவா எனக்கது என்கிறாய்.
எல்லாம் சரிதான்..
முத்தங்களையும் மூச்சடைக்க
பெற்றுக்கொண்டால் குறைந்தா போய்விடுவாய்?
*****************************************

ஏதேச்சையாய் உன்புகைப்படத்தை
பார்த்த என் வீட்டு கிளி
உன் உதடுகளை கொத்திப்பார்த்து விட்டு
ஏன் இந்த கோவைப்பழம்
இனிக்கவில்லை என கேட்டு
நச்சரிக்கிறது.
அது புகைப்படமென்று எப்படி
புரிய வைப்பேன் அதற்கு?
*********************************

எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை
வம்பிழுப்பதே உனக்கு வேலையாக
போய்விட்டது.
இனிமேல் வம்பிழுத்துதான் பாரேன்
மூச்சுக்கு முந்நூறு முத்தங்கள்
வைக்கப்போகிறேன் நான்.
**********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Apr 16, 2011

மனசு..

காட்சிகள் வர்ணம் தொலைத்து விட்டன.
வார்த்தைகள் ஜீவன் இழந்து விட்டன.
நேரங்களின் சிறகு முறிந்து விட்டது.
இன்னும் உன்னை தேடி தேடி
அலைந்து கொண்டுதானிருக்கிறது
மனசு.
****************************

தீராத ஆசைகளையும்
கரையாத நேசங்ளையும்
புதைக்க தெரிந்தவன்
நல்ல மனிதனாகிறான்.
தெரியாதவன் பைத்தியமாகிறான்.
*******************************

காற்றின் திசையில்
பறக்கும் பட்டமாய்
மனசின் திசையில்
வாழ்க்கை.
விருப்பங்களற்று.
*********************************

கருவோடு சுமந்ததை போலல்ல..
தெருவோடு காண்பதெல்லாம்
சில புன்னகைகளும்..
கொஞ்சமாய் நலம் விசாரிப்புகளும்
போதுமல்லவா?.
*****************************

சிரித்தால் சிரிக்கிறது
முறைத்தால் முறைக்கிறது
அழுதால் அழுகிறது.
உன் போலில்லை
என் வீட்டு கண்ணாடி.
*****************************


Apr 5, 2011

பல்லாங்குழி..

கனவுகள் அவரவர்
சொந்த உரிமையாம்..
அவற்றைகூட திருடி கொள்ள
உன்னால் மட்டும்தான் முடிகிறதடி.
************************

”நல்லா சாப்ட்டு சீக்கிரம்
குண்டாகுனா கேக்கவே மாட்டியா நீ?”
“ஏன்.. நா குண்டானா உனக்கென்ன?”
“ஹி..ஹி.. குண்டானா இடுப்புல
ஏதோ மடிப்பு விழுமாம்ல..
அங்கதான் வீடு கட்டி
குடித்தனம் பண்ணுவேன்னு
அடம் புடிக்குது மனசு..”
“அய்..அஸ்கு.. புஸ்கு.. ஆசைய பாரு”
பழிப்பு காட்டியதில்
பல்லாங்குழி ஆடுதடி அதே மனசு.
***************************

இனிமேல் சேலையெல்லாம்
கட்டவே கட்டாதே..
உன் எல்லா அழகையும்
தானே திருடி வைத்து கொள்(ல்)கிறது
கர்வம் பிடித்த சேலை.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.