Sep 6, 2013

மழைக்கவிதை..!


எங்கள் கல்லூரியில்
கவிதைப்போட்டி.
ஒரு மழைக்கவிதை
சொல்லேன்என்றாய்
ரொம்பநாளைக்குப்பிறகு.
மழையே ஒரு கவிதைதானே
அதற்கென்று தனியாக
ஒரு கவிதை எதற்கு' என்றேன்.
ஏய்ய்ய்.. விளையாடம சொல்லு
சிணுங்கினாய்.
எனக்குள் அப்போதே மழை
வரத்தொடங்கியது.
சரி கேளேன்..
மழைக்கும்
உன் மனதிற்கும்
மழைக்கும் அப்படியொன்றும்
பெரிதாய் வித்தியாசமில்லை.
மழையின் ப்ரியம்
மண்ணை நனைக்கும்
உன் ப்ரியம் 
என் மனதை நனைக்கும்!
எப்படி இருக்கு?’ என்றேன்.
ம்ம்ஹீம்ம்.. வேற சொல்லு..’
ம்ம்ம்.. இந்த மழைக்கும்
உன் வெட்கங்களுக்கும்
நேரம் காலமே தெரிவதில்லை..
இரண்டுமே அவ்வப்போது வந்து
நனைத்து சென்றுவிடுகின்றன
மனதை..!’
ப்ச்ச்இதுவும் நல்லால்ல..’
சரி கேளேன்..
எப்போது வந்தாலும்
உன் நினைவை 
கூட்டிக்கொண்டுதான்
வருகிறது இந்த மழை.
போகும்போது மட்டும்
தனியே சென்றுவிடுகிறது
நானோ விட்டுவிட
மனசில்லாமல்
உன் நினைவில் 
நனைந்துகொண்டு..!’ என்றேன்.
சுமார்தான்.. வேற..’
வேற என்ன..
பேசாமல் மழை வரும்போது
நீ குடை பிடித்து நடந்து காட்டு..
அதுக்கு பேர்தான் மழைக்கவிதை..
முதல் பரிசும் உனக்குதான்..

அட லூசு..’
சிரித்துக்கொண்டே நனைய
வைத்தாய் வெட்கங்களில்..!
***************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

1 comment:

sulthanonline said...

super bro kalakkitteenga,